வாரணாசியில் மோடி கார் மீது வீசப்பட்ட செருப்பை அகற்றும் பாதுகாப்பு படை வீரர். 
செய்திகள்

அதிர்ச்சி... பிரதமர் மோடியின் குண்டு துளைக்காத கார் மீது செருப்பு வீச்சு: வைரலாகும் வீடியோ!

கவிதா குமார்

பிரதமர் நரேந்திர மோடியின் சொந்த தொகுதியான வாரணாசியில் நேற்று பிரதமரின் குண்டு துளைக்காத கார் மீது செருப்பு வீசப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

கடந்த ஏப்ரல் 19-ம் தேதி முதல் ஏழு கட்டங்களாக மக்களவைத் தேர்தல் இந்தியா முழுவதும் நடைபெற்றது. இதில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி 291 இடங்களைக் கைப்பற்றியது. இக்கூட்டணியை எதிர்த்து போட்டியிட்ட இந்தியா கூட்டணி 234 இடங்களை கைபற்றியது. மத்தியில் ஆட்சி அமைக்க 272 இடங்கள் தேவை என்ற பட்சத்தில் பாஜக பெரும்பான்மை பெறவில்லை. இதனால் கூட்டணி கட்சிகளான ஐக்கிய ஜனதா தளம் மற்றும் தெலுங்கு தேசம் கட்சிகளின் ஆதரவோடு பிரதமர் மோடி மூன்றாவது முறையாக ஆட்சி அமைத்துள்ளார்.

3வது முறையாக பிரதமராக பதவி ஏற்றுக் கொண்ட நரேந்திர மோடி

பிரதமராக பதவியேற்ற நரேந்திர மோடி, முதல் முறையாக தான் போட்டியிட்ட வாரணாசி தொகுதிக்கு நேற்று சென்றார். அங்கு நடைபெற்ற ‘பிஎம் கிசான் சமேலன்’ என்ற விவசாயிகளுக்கு நேரடியாக வங்கிக் கணக்கில் நிதி உதவி செலுத்தும் திட்டத்தின் 17 வது தவணையாக 20,000 கோடி ரூபாயை விடுவித்தார். இதில் உத்தரப்பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் உள்ளிட்ட பல நிர்வாகிகள் கலந்து கொண்டனர். அப்போது மோடிக்கு பிரம்மாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டது.

பிரதமர் மோடி காரில் வருவதைக் கண்ட பொதுமக்களும், பாஜக தொண்டர்களும் சாலையோரம் நின்று கையசைத்து வரவேற்பு அளித்தனர். இந்த நிலையில், காரில் பயணம் செய்த போது பிரதமர் மோடி சென்ற குண்டு துளைக்காத கார் பானட்டின் மீது செருப்பு ஒன்று விழுந்தது.

வாரணாசியில் மோடி கார் மீது வீசப்பட்ட செருப்பை அகற்றும் பாதுகாப்பு படை வீரர்.

இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் தற்போது வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், பிரதமர் மோடி சென்ற கார் மீது செருப்பு ஒன்று விழுகிறது. இதைக் கவனித்த பாதுகாப்பு படையைச் சேர்ந்த ஒருவர், காரில் இருந்த செருப்பை எடுத்து கூட்டத்திற்குள் தூக்கி எறிகிறார்.

இந்த வீடியோவை பதிவு செய்த நபரின் பின்னணிக் குரலையும் வீடியோ பதிவு செய்துள்ளது. பிரதமர் மோடியின் வாகனம் வரும்போது, ​​"சப்பல் பேக் கே மார் தியா கோய்" (யாரோ சப்பலை வீசியது போல் தெரிகிறது) என்று அவர் வீடியோவில் கூறுவதைக் கேட்கலாம். இந்த வீடியோவை காங்கிரஸ் கட்சியினர் இணையதளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

வாரணாசி தொகுதியில் 2014-ம் ஆண்டு முதல் பிரதமர் நரேந்திர மோடி மூன்று முறை வெற்றி பெற்றுள்ளார். சொந்த தொகுதிக்குச் சென்ற பிரதமர் மோடி மீது செருப்பு வீசப்பட்ட சம்பவம் பாஜகவினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

SCROLL FOR NEXT