உயிரிழந்த காவலர் ரவிச்சந்திரன் 
செய்திகள்

வாக்கு எண்ணும் மையத்தில் எஸ்.ஐ மாரடைப்பால் சுருண்டு விழுந்து பலி... இதுதான் காரணமா?

கே.காமராஜ்

ராமநாதபுரம் அண்ணா பொறியியல் கல்லூரியில் வாக்கு எண்ணும் மையத்தில் பாதுகாப்பு பணியில் இருந்த பரமக்குடி தாலுகா காவல் நிலைய சார்பு ஆய்வாளர் ரவிச்சந்திரன மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மக்களவைத் தேர்தல் நாடு முழுவதும் கடந்த ஏப்ரல் 19-ம் தேதி தொடங்கி, வருகிற ஜூன் 1-ம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. ஜூன் 4-ம் தேதி நாடு முழுவதும் ஒரே கட்டமாக வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. தமிழ்நாட்டில் முதல் கட்ட தேர்தலின் போது 39 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்ற முடிந்தது. இதையடுத்து பதிவான வாக்குகள் அடங்கிய மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அந்தந்த தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள வாக்கு எண்ணும் மையங்களில் பலத்த பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளன.

ராமநாதபுரம் மக்களவைத் தொகுதி வாக்கு எண்ணும் மையம்

இதற்காக அனைத்து வாக்கு எண்ணும் மையங்களிலும் மூன்றடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. வேட்பாளர்களின் முகவர்களும் சுழற்சி முறையில் தொடர்ந்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக ராமநாதபுரம் மக்களவைத் தொகுதியில் பதிவான வாக்குகள் அடங்கிய மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் கூட்டாம்புளி பகுதியில் அமைந்துள்ள அண்ணா பல்கலைக்கழகத்திற்கு உட்பட்ட பொறியியல் கல்லூரியில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. இங்கு ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த ஏராளமான போலீஸார் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

ராமநாதபுரம் அரசு மருத்துவமனை

இதில் பரமக்குடி தாலுகா காவல் நிலைய சார்பு ஆய்வாளர் ரவிச்சந்திரன்(59) என்பவரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தார். நேற்று வழக்கம்போல் பணியில் ஈடுபட்டிருந்த போது திடீரென ரவிச்சந்திரன் மாரடைப்பு ஏற்பட்டு சுருண்டு விழுந்துள்ளார். இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த சக காவலர்கள் உடனடியாக அவரை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.

அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கெனவே உயிரிழந்ததாக தெரிவித்தனர். அடுத்த ஆண்டு மார்ச் மாதம் ஓய்வு பெற இருந்த நிலையில் சார்பு ஆய்வாளர் ரவிச்சந்திரன் மாரடைப்பால் உயிரிழந்துள்ளார்.பணி அழுத்தம் காரணமாக அவர் உயிர் இழந்தாரா என போலீஸார் விசாரித்து வருகின்றனர். இதையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் சக காவலர்களிடையே பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

SCROLL FOR NEXT