ஷோபா கரந்த்லாஜே 
செய்திகள்

எடியூரப்பா மீதான போக்சோ வழக்கை ஊடகங்கள் மூலமே அறிந்தேன்... அட போட வைத்த மத்திய அமைச்சர் ஷோபா!

கவிதா குமார்

எடியூரப்பா மீதான போக்சோ வழக்கு குறித்து எனக்கு எதுவும் தெரியாது. ஊடகங்கள் மூலமே அதுகுறித்து தெரிந்து கொண்டேன் என்று கர்நாடாகாவைச் சேர்ந்த மத்திய இணை அமைச்சர் ஷோபா கரந்த்லாஜே கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படும் குற்றச்சாட்டில், கர்நாடக முன்னாள் முதல்வரும், பாஜக மூத்த தலைவருமான பி.எஸ்.எடியூரப்பாவை கைது செய்ய நீதிமன்றம் வாரண்ட் பிறப்பித்து உத்தரவிட்டுள்ளது. கடந்த பிப்ரவரி 2-ம் தேதி, உதவி கோரி தனது தாயுடன் வந்த 17 வயது சிறுமியை எடியூரப்பா பாலியல் வன்கொடுமை செய்ததாக அவருக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டது.

எடியூரப்பா

இதையடுத்து, மார்ச் 14-ம் தேதி அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கை சிஐடி போலீஸார் விசாரித்து வருகின்றனர். குற்றம் சாட்டப்பட்டவரை இன்னும் கைது செய்யாதது ஏன் என்று கர்நாடக உயர் நீதிமன்றத்தில் பாதிக்கப்பட்டவர் தாக்கல் செய்த ரிட் மனுவைத் தொடர்ந்து, ஜூன் 12-ம் தேதி விசாரணைக்கு ஆஜராகுமாறு எடியூரப்பாவுக்கு சிஐடி சம்மன் அனுப்பியது.

கைது வாரண்ட்

அதற்குப் பதில் அளித்த எடியூரப்பா, தான் தற்போது டெல்லியில் இருப்பதாகவும், வரும் 17-ம் தேதி விசாரணைக்கு ஆஜராவதாகவும் தெரிவித்திருந்தார். இதன் காரணமாக, எடியூரப்பாவுக்கு எதிராக கைது வாரண்ட் கோரும் விண்ணப்பத்தை சிஐடி, பெங்களூரு விரைவு நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது.

இதையடுத்து, எடியூரப்பாவுக்கு எதிராக ஜாமீனில் வெளிவர முடியாத கைது வாரண்ட்டை நீதிமன்றம் இன்று (ஜூன் 13) பிறப்பித்தது. இதனால் அவர் எந்த நேரத்தில் வேண்டுமானாலும் கைது செய்யப்படலாம் என்ற நிலை ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில், மத்திய இணை அமைச்சராக பதவியேற்றுக் கொண்டு பெங்களூரு இன்று வந்த ஷோபா கரந்த்லாஜே செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவரிடம் போக்சோ வழக்கில் சிக்கியுள்ள எடியூரப்பா விவகாரம் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

ஷோபா கரந்த்லாஜே

அதற்கு மத்திய இணை அமைச்சர் ஷோபா, " இந்த வழக்கின் விவரம் குறித்து எனக்குத் தெரியாது. அதை ஊடகங்கள் மூலமாகத்தான் பார்த்தேன். எடியூரப்பாவின் நீண்ட அரசியலைப் பார்த்திருக்கிறேன். இதில் மாநில அரசின் பங்கு பற்றி எனக்குத் தெரியாது. நீதிமன்றம் நாட்டின் சட்டத்தை நிலைநாட்டும். எடியூரப்பா மீதான வழக்கை மக்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்" என்று பதிலளித்தார்.

நடிகர் தர்ஷன்

மேலும், அவர் கூறுகையில்," மக்களவைத் தேர்தலில் மாண்டியாவில் காங்கிரஸ் வேட்பாளருக்கு ஆதரவாக நடிகர் தர்ஷன் பிரச்சாரம் செய்தார். காங்கிரஸ் கட்சி உழைத்ததால் கொலை வழக்கில் இருந்து அவர் பாதுகாக்கப்படுகிறாரா? கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சி அமைந்ததில் இருந்து யாருக்கும் பாதுகாப்பு இல்லை என்று தெரிகிறது. மாநில அரசு குண்டர்கள் பக்கம் தான் உள்ளது. தர்ஷன் காவலில் வைக்கப்பட்ட காவல் நிலையத்துக்கு பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. பொதுமக்களுக்கு ஒரு சட்டம், காங்கிரஸாருக்கு ஒரு சட்டம் என்ற செய்தியை இதன் மூலம் இந்த அரசு தெளிவுபடுத்தியுள்ளது" என்று மத்திய இணை அமைச்சர் ஷோபா கரந்த்லாஜே கூறினார்.

SCROLL FOR NEXT