கருப்பு கொடிகள் கட்டி ராமேஸ்வரம் மீனவர்கள் காலவரையற்ற போராட்டம் 
செய்திகள்

தொடரும் இலங்கை கடற்படை தாக்குதல்கள்... கருப்புக்கொடியுடன் காலவரையற்ற போராட்டம் தொடங்கிய மீனவர்கள்

காமதேனு

இலங்கை கடற்படையினரின் தொடர் தாக்குதல்களை கண்டித்து படகுகளில் கருப்புக்கொடி கட்டி காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ராமேஸ்வரம் மீனவர்கள் ஈடுபட்டுள்ளனர்.

ராமேஸ்வரம் மீன் பிடி துறைமுகத்தில் இருந்து கடந்த 4ம் தேதி மீன்பிடிக்க மீனவர்கள் கடலுக்கு சென்று இருந்தனர். காங்கேசன் கடல் எல்லைப் பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, அப்பகுதிக்கு இலங்கை கடற்படையினர் ரோந்து வந்தனர். எல்லை தாண்டி மீன்பிடித்ததாக 2 விசைப்படகுகளையும், அதிலிருந்த 23 மீனவர்களையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

படகுகளில் கருப்புக்கொடி கட்டும் மீனவர்கள்

இந்நிலையில் நேற்று முன்தினம் நீதிமன்றத்தில் கைது செய்யப்பட்டவர்கள் ஆஜர்படுத்தப்பட்டதில், 20 மீனவர்கள் மட்டும் விடுதலை செய்யப்பட்டனர். படகு ஓட்டுநர்கள் இருவருக்கு 6 மாதம் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. மற்றொரு மீனவர் இரண்டாவது முறையாக எல்லை தாண்டிய குற்றச்சாட்டில், ஓராண்டு சிறை தண்டனையும் விதித்து ஊர்காவல்துறை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

5 தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிப்பு

இதையடுத்து ராமேஸ்வரம் மீனவர்கள் இந்த உத்தரவுக்கு எதிர்ப்பு தெரிவித்து, போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் மீனவர்கள் படகுகளை நிறுத்தி வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் தங்களுடைய படகுகளில் கருப்பு கொடி கட்டி தங்களுடைய எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர்.

இந்த வேலை நிறுத்தம் காரணமாக 10 கோடி ரூபாய் அளவுக்கு அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுவதோடு, நேரடியாகவும் மறைமுகமாகவும் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீன்பிடி தொழிலைச் சார்ந்த தொழிலாளர்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். இந்த விவகாரத்தில் முழுமையான தீர்வு எட்டப்படும் வரை தங்களுடைய போராட்டம் காலவரையின்றி தொடரும் எனவும் மீனவர்கள் அறிவித்துள்ளனர்.

SCROLL FOR NEXT