பிரியங்கா காந்தி 
செய்திகள்

வயநாடு இடைத்தேர்தலில் பிரியங்கா காந்தி போட்டி? காங்கிரஸ் தொண்டர்கள் உற்சாகம்

எஸ்.எஸ்.லெனின்

வயநாடு மக்களவைத் தொகுதி வெற்றியில் இருந்து ராகுல் காந்தி விலக இருப்பதாக வெளியான தகவல்களை அடுத்து, அங்கு நடைபெறவிருக்கும் இடைத்தேர்தலில் பிரியங்கா காந்தி போட்டியிடுவார் என காங்கிரஸ் வட்டாரத்தில் எதிர்பார்க்கப்படுகிறது.

2024 மக்களவைத் தேர்தலில் கேரளத்தின் வயநாடு தொகுதியில் ராகுல் காந்தி முதலில் களமிறங்கினார். வயநாடு வாக்குப்பதிவு முடிந்த பின்னர், அடுத்த கட்ட வாக்குப்பதிவுக்கு காத்திருந்த உத்தரபிரதேசத்தின் ரேபரேலி தொகுதிக்கு மனுத்தாக்கல் செய்தார். தேர்தல் முடிவுகளில் அவர் வயநாடு, ரேபரேலி என இரு தொகுதிகளிலும் பெரும் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

ராகுலின் வயநாடு ரோடு ஷோ

ஒரு வேட்பாளர் 2 தொகுதிகளில் போட்டியிட அனுமதிக்கப்பட்டாலும், அந்த 2 தொகுதிகளிலும் வெற்றிபெறும் பட்சத்தில், இரண்டின் மக்கள் பிரதிநிதியாகவும் அவரால் தொடர இயலாது. எனவே ராகுல் காந்தி வயநாடு, ரேபரேலி ஆகிய இரண்டில் ஒரு தொகுதியை விட்டுக்கொடுத்தாக வேண்டும். தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட 14 நாட்களுக்குள் இரண்டில் ஒன்றை ராஜினாமா செய்தாக வேண்டும். அவ்வாறு செய்யத் தவறினால் இரண்டு இடங்களும் காலியாகிவிடும் என்பது குறிப்பிடத்தக்கது.

மக்களவை தேர்தல் முடிவுகள் ஜூன் 4 அன்று அறிவிக்கப்பட்டன. இதன்படி ஜூன் 18-ம் தேதிக்குள் ராகுல் தனது முடிவை எடுத்தாக வேண்டும். இந்த இரண்டில் எதை ராகுல் விட்டுக்கொடுப்பார் என்பதன் விவாதங்கள், அதன் அடுத்த கட்டமாக காலியாகும் தொகுதியின் காங்கிரஸ் வேட்பாளராக எவர் போட்டியிடுவார் என்பதில் வளர்ந்து நிற்கின்றன. இரண்டு தொகுதிகளில் வயநாடு தொகுதியை ராகுல் விட்டுக்கொடுக்கவே அதிக வாய்ப்புகள் தென்படுகின்றன. இதனை கேரள மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.சுதாகரன் கோடிட்டு காட்டியுள்ளார்.

"தேசத்தை வழிநடத்த வேண்டிய ராகுல் காந்தி வயநாட்டில் இருப்பார் என்று எதிர்பார்க்க முடியாது. இதில் நாம் வருத்தப்பட வேண்டாம். அனைவரும் அதைப் புரிந்துகொண்டு அவருக்கு ஆதரவை வழங்க வேண்டும்" என்று கே.சுதாகரன் அண்மையில் கூறியுள்ளார். ராகுல் காந்தியும் தனது பங்குக்கு, ‘இந்த முடிவு தனக்கு ஒரு சங்கடமாக இருந்த போதிலும், தனது ஆதரவாளர்கள் கவலைப்படும் அளவுக்கு இருக்காது’ என்றார். ”கவலைப்பட வேண்டாம், ரேபரேலி மற்றும் வயநாடு இரண்டுமே எனது முடிவால் மகிழ்ச்சியடையும்" என்று வயநாடு கூட்டமொன்றில் ராகுல் தெரிவித்தார்.

ராகுல் காந்தி - பிரியங்கா காந்தி

இதனையடுத்தே வயநாடு தொகுதியின் இடைத்தேர்தல் காங்கிரஸ் வேட்பாளராக பிரியங்கா காந்தி களமிறங்குவார் என்ற எதிர்பார்ப்புகள் எழுந்துள்ளன. இதன் மூலம் பிரியங்கா காந்தியின் நேரடி தேர்தல் பிரவேசம் தொடங்கவும் வாய்ப்பாகி உள்ளது. முன்னதாக ரேபரேலி தொகுதியில் நடைபெற்ற காங்கிரஸ் நிர்வாகிகள் கூட்டத்தில் பேசிய ராகுல் காந்தி, “எனது சகோதரி என் பேச்சைக் கேட்டு வாராணசி தொகுதியில் போட்டியிட்டிருப்பின், 3 முதல் 4 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் மோடியை தோற்கடித்திருப்பார்” என நம்பிக்கை தெரிவித்திருந்தார்.

இதனால் பிரியங்கா காந்தியின் தேர்தல் பிரவேசத்துக்கு எதிர்பார்ப்புகள் அதிகரித்தன. அவை வயநாடு வாயிலாக விரைவில் பூர்த்தியாக இருக்கின்றன. பிரியங்கா காந்தியை வரவேற்று வயநாடு தொகுதியை ஏற்கனவே சுவரொட்டிகள் அலங்கரிக்க ஆரம்பித்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT