ஸ்ரீநகரில் நடைபெற்ற யோகா தின விழாவில் பேசிய பிரதமர் மோடி 
செய்திகள்

யோகாவை அன்றாட வாழ்க்கையின் ஒரு பகுதியாக மாற்ற வேண்டும்: பிரதமர் மோடி வேண்டுகோள்!

வ.வைரப்பெருமாள்

யோகாவை அனைவரும் தங்கள் அன்றாட வாழ்க்கையின் ஒரு பகுதியாக மாற்ற வேண்டும் என, சர்வதேச யோகா தின விழாவில் பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தியுள்ளார்.

இரண்டு நாள் பயணமாக ஜம்மு - காஷ்மீர் மாநிலத்துக்கு சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி, ஸ்ரீநகரில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை தொடங்கி வைக்க உள்ளார். இந்நிலையில் 10வது சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு ஸ்ரீநகரில் இன்று நடைபெற்ற யோகா தின விழாவில் பிரதமர் மோடி பங்கேற்றார்.

இந்நிகழ்ச்சியில் அவர் மக்களுடன் இணைந்து பல்வேறு யோகாசனங்களை செய்தார். அதைத் தொடர்ந்து நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியதாவது:

"யோகாவை அனைவரும் தங்கள் அன்றாட வாழ்க்கையின் ஒரு பகுதியாக மாற்ற வேண்டும் என நான் கேட்டுக்கொள்கிறேன். யோகா வலிமை மற்றும் ஆரோக்கியத்தை வளர்க்கிறது. ஸ்ரீநகரில் இந்த ஆண்டு யோகா நிகழ்ச்சியில் பங்கேற்பது அருமையாக உள்ளது.

யோகா தினத்தை முன்னிட்டு நாட்டு மக்களுக்கும், உலகின் ஒவ்வொரு மூலையிலும் யோகா செய்யும் மக்களுக்கும் எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். சர்வதேச யோகா தினம் 10 ஆண்டுகால வரலாற்று பயணத்தை நிறைவு செய்துள்ளது.

ஸ்ரீநகரில் நடைபெற்ற யோகா தின விழாவில் யோகாசனம் செய்யும் பிரதமர் மோடி

2014-ம் ஆண்டில், ஐக்கிய நாடுகள் சபையில் சர்வதேச யோகா தினத்தை நான் முன்மொழிந்தேன். இந்தியாவின் இந்த முன்மொழிவை 177 நாடுகள் ஆதரித்தன. இது ஒரு சாதனையாகும். அப்போதிலிருந்து, யோகா தினம் புதிய சாதனைகளை படைத்து வருகிறது” என்று பேசினார்.

மூன்றாவது முறையாக பதவியேற்ற பிறகு ஜம்மு-காஷ்மீருக்கு பிரதமர் மோடி மேற்கொண்டுள்ள முதல் பயணம் இதுவாகும்.

SCROLL FOR NEXT