பிரதமர் நரேந்திர மோடி 
செய்திகள்

இன்று 2024 மக்களவைத் தேர்தலின் இறுதிக்கட்டம்... பிரதமர் மோடி செய்த பரபரப்பு ட்விட்!

கவிதா குமார்

மக்களவைத் தேர்தல் இறுதிக்கட்ட வாக்குப்பதிவு இன்று 57 தொகுதிகளில் நடைபெறுகிறது. இதனையொட்டி பிரதமர் நரேந்திர மோடி வாக்காளர்களுக்கு வேண்டுகோள் விடுத்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இந்தியா முழுவதும் ஏப்ரல்19-ம் தேதி முதல் மக்களவை தேர்தல் ஏழு கட்டங்களாக நடத்தப்பட்டு வருகிறது. ஏற்கெனவே 6 கட்ட தேர்தல் நடைபெற்று முடிந்துள்ளது. இந்த நிலையில், இறுதிக்கட்டமாக பிரதமர் நரேந்திர மோடி போட்டியிடும் வாரணாசி உள்ளிட்ட 57 தொகுதிகளில் வாக்குப்பதிவு இன்று நடைபெற்று வருகிறது.

மக்களவை, சட்டப் பேரவைத் தேர்தல்

அதன்படி பஞ்சாப் மாநிலத்தின் 13 தொகுதிகள் மற்றும் இமாச்சலப் பிரதேசத்தின் 4 தொகுதிகள், உத்தரப்பிரதேசத்தில் 13 தொகுதிகள், மேற்கு வங்கத்தில் 9 தொகுதிகள், பீகாரில் 8 தொகுதிகள், ஒடிசாவில் 6 தொகுதிகள், சண்டிகர் தவிர ஜார்க்கண்டில் 3 தொகுதிகளிலும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

பிரதமர் நரேந்திர மோடி

அதேபோல் ஒடிசாவில் 41 சட்டசபை தொகுதிகளுக்கும் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள 6 சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலும் இன்று நடந்து வருகிறது.. இறுதி கட்டமாக இன்று மக்களவைத் தேர்தல் நடக்கும் 57 தொகுதிகளில் மொத்தம் 904 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.

பிரதமர் நரேந்திர மோடி உத்தரப் பிரதேச மாநிலம் வாரணாசியில் தொடர்ந்து மூன்றாவது முறையாக போட்டியிடுகிறார். அவருக்கு எதிராக அஜய் ராய் (காங்கிரஸ்), அதர் ஜமால் லாரி (பிஎஸ்பி), கோலிசெட்டி சிவ குமார் (யுக துளசி கட்சி), ககன் பிரகாஷ் யாதவ், (அப்னா தளம், காமராவதி), மற்றும் சுயேச்சைகள் தினேஷ் குமார் யாதவ், சஞ்சய் குமார் திவாரி ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

இறுதிக்கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வரும் நிலையில் பிரதமர் நரேந்திர மோடி எக்ஸ் தளத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில், "இன்று 2024 மக்களவைத் தேர்தலின் இறுதிக்கட்டம். இளைஞர்கள் மற்றும் இளம் பெண் வாக்காளர்கள் அதிக எண்ணிக்கையில் தங்கள் வாக்குகளைப் பதிவு செய்வார்கள் என்று நம்புகிறேன். ஒன்றாக இணைந்து நமது ஜனநாயகத்தை மேலும் துடிப்பானதாகவும், பங்கேற்பு மிக்கதாகவும் மாற்றுவோம்" என்று பதிவிட்டுள்ளார்.

SCROLL FOR NEXT