வருமான வரித்துறை 
செய்திகள்

பணம் கொடுத்தால் ஐ.டி ரெய்டு வராது... மிரட்டிய போலி வருமான வரித்துறை அதிகாரி கைது!

கவிதா குமார்

வருமான வரித்துறை அதிகாரி எனக்கூறி தொழிலதிபர்களை மிரட்டி பணமோசடியில் ஈடுபட்ட கார் ஓட்டுநர் கைது செய்யப்பட்டுள்ளார்.

திண்டுக்கல் நாட்டாண்மைக்கார தெரு பகுதியைச் சேர்ந்தவர் விக்னேஷ் குமார். இவர் தேனி மக்களவைத் தேர்தலின் போது வருமானவரித்துறை புலனாய்வு பிரிவில் ஆக்டிங் ஓட்டுநராக பணி புரிந்துள்ளார்.

இந்த நிலையில் மதுரை, தேனி, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் உள்ள பல்வேறு தொழிலதிபர்கள் மற்றும் நகைக்கடை உரிமையாளர்களுக்கு கைபேசியில் தொடர்பு கொண்டு வருமான வரித்துறை ரெய்டு வரவுள்ளதாகவும், தனக்கு பணம் கொடுத்தால் அந்த ரெய்டு வராது என்றும், தன்னை வருமான வரித்துறை அதிகாரி என்றும் விக்னேஷ் குமார் கூறி மோசடியில் ஈடுபட்டுள்ளார்.

இதனைத் தொடர்ந்து மதுரையில் உள்ள நகைக்கடைகளுக்கும், தேனியில் உள்ள மருத்துவமனை, கம்பத்தில் உள்ள உணவகம் ஆகிய பகுதிகளுக்கு கைபேசி மூலம் நேற்று முன்தினம் அழைத்து செய்து வருமான வரித்துறை ரெய்டு வர உள்ளது. பணம் கொடுத்தால் அந்த ரெய்டு வராமல் பார்த்துக் கொள்வதாக விக்னேஷ் குமார் கூறியுள்ளார்.

இது தொடர்பாக வருமான வரித்துறை புலனாய்வு பிரிவு உதவி இயக்குநர் புஷ்பராஜ் என்பவர் அளித்த புகாரின்கீழ் மதுரை விளக்குத்தூண் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்தனர்.

இதையடுத்து. விக்னேஷ் குமாரை போலீஸார் கைது செய்தனர். அவர் வேறு எங்கு இப்படி மோசடியில் ஈடுபட்டார் என்று தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். வருமான வரித்துறை அதிகாரி என்று தொழிலதிபர்களை கைபேசி மூலமாக மிரட்டிய கார் ஓட்டுநர் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

SCROLL FOR NEXT