விநாயகர் சிலை பறிமுதல் செய்யப்பட்டதை கண்டித்து மக்கள் போராட்டம் 
செய்திகள்

விநாயகர் சிலையை பறிமுதல் செய்த வட்டாட்சியர்... கொதித்தெழுந்த மக்கள்

கே.காமராஜ்

கடலூர் அருகே விநாயகர் சிலையை பறிமுதல் செய்த வட்டாட்சியரை கண்டித்து அலுவலகத்தை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே மாளிகைமேடு கிராமம் அமைந்துள்ளது. இங்கு பட்டியலின மக்கள், பொது இடத்தில் விநாயகர் கோயில் கட்டுவதற்கு ஏற்பாடு செய்துள்ளனர். இதற்கு அதே ஊரில் உள்ள மாற்று சமூகத்தைச் சேர்ந்த சிலர் எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது. இந்த விவகாரம் தொடர்பாக வேப்பூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு சமாதான கூட்டம் நடைபெற்றுள்ளது. அதில் உடன்பாடு ஏற்படவில்லை.

போலீஸாருடன் பெண்கள் கடும் வாக்குவாதம்

இந்நிலையில் நேற்று இரவு அந்த இடத்தில் பட்டியலின மக்கள் விநாயகர் சிலையை வைத்துள்ளனர். இது குறித்து தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு சென்ற வேப்பூர் வட்டாட்சியர் அந்த விநாயகர் சிலையை பறிமுதல் செய்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அந்த பகுதி மக்கள் மாளிகைமேடு பேருந்து நிறுத்தத்தில் சாலை மறியலில் ஈடுபட்டனர். பின்னர் 100க்கும் மேற்பட்டோர் வேப்பூர் வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

வட்டாட்சியர் தலைமையில் முத்தரப்பு பேச்சுவார்த்தை

இது குறித்து தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு வந்த போலீஸார், பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் வட்டாட்சியர் தலைமையில் போலீஸார் மற்றும் கிராம மக்கள் ஆகியோருடனான முத்தரப்பு பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இந்த சம்பவம் காரணமாக அப்பகுதியில் தொடர்ந்து பரபரப்பு நிலவி வருகிறது.

SCROLL FOR NEXT