பதஞ்சலி
பதஞ்சலி 
செய்திகள்

நிபந்தனையற்ற பொது மன்னிப்பு... மெகா சைஸ் விளம்பரம் வெளியிட்டது பதஞ்சலி நிறுவனம்!

காமதேனு

உச்ச நீதிமன்றத்தில் நேற்று கடும் கண்டனங்களுக்கு உள்ளான பதஞ்சலி நிறுவனம், தேசிய நாளிதழ்களில் பெரிய சைஸில் பொது மன்னிப்புக் கேட்டு புதிய விளம்பரத்தை வெளியிட்டுள்ளது.

குணப்படுத்தவே வாய்ப்பில்லாத நாள்பட்ட நோய்கள், மரபணு நோய்களை பதஞ்சலியின் ஆயுர்வேத மருந்துகள் குணப்படுத்தும் என்று பிரபல யோகா குரு பாபா ராம்தேவின் பதஞ்சலி நிறுவனம் விளம்பரம் வெளியிட்டது. இந்த விளபரத்தை உச்ச நீதிமன்றம் கடுமையாக எச்சரித்தும், தொடர்ந்து விளம்பரங்களை வெளியிட்டதை அடுத்து, பதஞ்சலி நிறுவனத்தின் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கு விசாரணையின் போது பதஞ்சலி நிறுவனத்தின் செயல்பாட்டை உச்ச நீதிமன்றம் கடுமையாக கண்டித்தததை அடுத்து, கடந்த 16-ம் தேதி நீதிமன்றத்தில் பாபா ராம்தேவ் நேரில் ஆஜராகி மன்னிப்புக் கோரினார். மேலும், ”எதிர்காலத்தில் உச்ச நீதிமன்றத்தில் அளித்த வாக்குறுதியை மீறமாட்டேன்” என்றும் ராம்தேவ் உறுதியளித்தார்.

பாபா ராம்தேவுடன், பதஞ்சலி நிர்வாக இயக்குநர் ஆச்சார்யா பாலகிருஷ்ணா (இடது).

இதையடுத்து, தேசிய செய்தி நாளிதழ்களில் விளம்பரம் வெளியிட்டு பொது மன்னிப்பும் கோரினார் ராம்தேவ். அதில், ’நாங்கள் நீதிமன்றத்தின் மீது மிகப் பெரிய மரியாதை கொண்டுள்ளோம். மீண்டும் தவறு செய்ய மாட்டோம்’ என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்நிலையில், இந்த வழக்கின் விசாரணை நேற்று மீண்டும் நடைபெற்றது.

அப்போது, ”இனி நீங்கள் அளிக்கும் விளம்பரத்தை வெட்டி எடுத்து எங்கள் கைகளில் கொடுக்கும் அளவுக்கு பெரிதாகக் கொடுங்கள். அவற்றைப் மைக்ரோஸ்கோப் வைத்து பார்க்கும்படி சிறியதாகக் கொடுக்காதீர்கள்... எங்களுக்கு அசல் விளம்பரத்தைப் பார்க்க வேண்டும். இதுதான் எங்களின் வழிகாட்டுதல்" என்று தெரிவித்த உச்ச நீதிமன்றம் வழக்கை அடுத்த வாரத்த்துக்கு ஒத்திவைத்தது.

உச்ச நீதிமன்றத்தின் கண்டிப்பை அடுத்து 67 தேசிய செய்தித் தாள்களில் பொதுமன்னிப்புக் கேட்டு புதிய விளம்பரத்தை பதஞ்சலி நிறுவனம் இன்று வெளியிட்டுள்ளது. இந்தி மற்றும் ஆங்கிலத்தில் இந்த விளம்பரங்கள் வெளியிடப்பட்டுள்ளது.

பதஞ்சலி விளம்பரம்

அந்த விளம்பரத்தில், ’உச்ச நீதிமன்றத்தில் வழக்கு நடந்து வருவதை அடுத்து, உச்ச நீதிமன்றத்தின் வழிகாட்டுதல்கள், ஆணைகளுக்கு இணங்காததற்கு அல்லது கீழ்ப்படியாததற்கு தனிப்பட்ட முறையிலும் நிறுவனத்தின் சார்பாகவும் நிபந்தனையற்ற மன்னிப்புக் கோருகிறோம். நீதிமன்றத்தின் வழிகாட்டுதல்கள் மற்றும் அறிவுறுத்தல்களை உரிய கவனத்துடனும், மிகுந்த நேர்மையுடனும் கடைப்பிடிப்போம் என்பதை நாங்கள் உறுதியளிக்கிறோம்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில், 'நிபந்தனையற்ற பொது மன்னிப்பு' என்பது முந்தைய விளம்பரத்தை விட பெரிய எழுத்துக்களில் அச்சிடப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT