கேரளா கனமழை 
செய்திகள்

கேரளா மக்களே உஷார்... 3 நாட்கள் பலத்த கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை!

கவிதா குமார்

கேரள மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும் கனமழை கொட்டி வரும் நிலையில் இன்று மூன்று மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் என இந்திய வானிலை மையம் ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்துள்ளது.

கேரள மாநிலத்தில் மே 30-ம் தேதி தென்மேற்கு பருவமழை தொடங்கியது. அன்று முதல் மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில கனமழை பெய்து வருகிறது. இதனால் அங்குள்ள நீர்நிலைகள் வேகமாக நிரம்பி வருகின்றன. குறிப்பாக இடுக்கி மாவட்டத்தில் கடந்த வெள்ளிக் கிழமை முதல் மழை கொட்டி வருகிறது. இதனால் இரவு நேரத்தில் பயணம் மேற்கொள்ள வேண்டாம் என இடுக்கி மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.

கனமழை

இந்த நிலையில் இன்று முதல் மாநிலத்தில் கனமழை முதல் மிக கனமழை பெய்யும் என்றும், இடுக்கி, கோழிக்கோடு, வயநாடு ஆகிய மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கையை இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) விடுத்துள்ளது. இடியுடன் கூடிய பலத்த மழை பெய்யும் என்றும் மணிக்கு 30 முதல் 40 கி.மீ வேகத்தில் பலத்த காற்று வீசும் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.

மேலும் தென்மேற்கு பருவமழை மத்திய அரபிக்கடலின் மேலும் சில பகுதிகள், தெற்கு அரபிக்கடலின் மீதமுள்ள பகுதிகள், லட்சத்தீவு பகுதி மற்றும் கேரளா, கர்நாடகா மற்றும் ராயலசீமாவின் சில பகுதிகள், தமிழகத்தின் மேலும் சில பகுதிகள் மற்றும் தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் 2 முதல் 3 நாட்களில் தொடங்க சாதகமான சூழ்நிலைகள் உள்ளன என்றும் இந்திய வானிலை மையம் கூறியுள்ளது.

கனமழை

தென்கிழக்கு அரபிக்கடலில் தெற்கு கேரளா பகுதியில் சராசரி கடல் மட்டத்திலிருந்து 5.8 முதல் 7.6 கிமீ உயரத்தில் சூறாவளி சுழற்சி உள்ளது. இதன் காரணமாக ஜூன் 5-ம் தேதி வரை கேரளாவில் பலத்த மேற்கு மற்றும் வடமேற்குக் காற்று வீசும். இதன் தாக்கத்தால் கேரளாவில் ஜூன் 2 மற்றும் 5 ஆகிய தேதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. .ஜூன் 3 மற்றும் 4 ஆகிய தேதிகளில் மாநிலத்தில் ஓரிரு இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என்றும் ஜூன் 7-ம் தேதி வரை கேரளாவில் பெரும்பாலான இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது என்றும் இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.

கனமழை பாதிப்பு

இடுக்கி, கோழிக்கோடு மற்றும் வயநாடு ஆகிய மாவட்டங்களில் மிக கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை இன்று விடுக்கப்பட்டுள்ளது. எர்ணாகுளம், திருச்சூர், பாலக்காடு, மலப்புரம், கண்ணூர் மற்றும் காசர்கோடு ஆகிய மாவட்டங்களில் இன்று மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT