நுழைவுத் தேர்வு 
செய்திகள்

நீட், நெட் வரிசையில் இழுபறியில் சிக்கும் அடுத்த தேர்வு... ஒத்திவைப்பதாக தேசிய தேர்வு முகமை திடீர் அறிவிப்பு

எஸ்.எஸ்.லெனின்

தவிர்க்க இயலாத காரணத்தினால் ’சிஎஸ்ஐஆர் யுஜிசி-நெட்’ தேர்வினை ஒத்திவைப்பதாக தேசிய தேர்வு முகமை திடீர் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

இளநிலை மருத்துவப் படிப்பு சேர்க்கைக்கான நீட் மற்றும் பல்கலைக்கழகங்களின் உதவிப் பேராசிரியர்கள் தேர்வுக்கான யுஜிசி-நெட் என இதுவரை, தேசிய தேர்வு முகமையின் இரு பிரதான தேர்வுகள் சர்ச்சையில் சிக்கி உள்ளன.

நீட் தேர்வு

நீட் நுழைவுத்தேர்வு முடிவுகள் வெளியானபோது, முழு மதிப்பெண் மற்றும் கருணை மதிப்பெண் பெற்றவர்கள் தொடர்பான சர்ச்சைகள் எழுந்தன. கடைசியில் அவை வினாத்தாள் கசிவு புகார்களில் முடிந்தன. நீட் தேர்வில் வினாத்தாள் கசிவு நடக்கவே இல்லை என மத்திய அரசு சாதித்ததன் மத்தியில், பீகார் கைதான நபர்கள் வினாத்தாள் கசிவை உறுதி செய்தனர்.

அடுத்ததாக யுஜிசி-நெட் வினாத்தாள் கசிவு உறுதியானதை அடுத்து, தேர்வு முடிந்த மறுதினமே அதனை ரத்து செய்வதாக அறிவிப்பு வெளியானது. நெட் வினாத்தாள் கசிவு, டார்க் நெட் முதல் டெலகிராம் குழுக்கள் வரை எதிரொலித்ததில் தேசிய தேர்வு முகமை அதிர்ச்சி அடைந்துள்ளது.

இதனையடுத்து தேசிய தேர்வு முகமையை பலப்படுத்தும் பணிகள் தொடங்கியிருப்பதாக மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார். தேசிய தேர்வு முகமையின் இதர தேர்வுகள் மீதும் சந்தேகத்தின் நிழல் படிந்ததில், அடுத்து நடைபெறவிருந்த தேர்வு ஒன்றினை தள்ளி வைத்து உத்தரவு வெளியாகி உள்ளது.

தேசிய தேர்வு முகமை

இதன்படி தவிர்க்க இயலாத சூழ்நிலை காரணமாக சிஎஸ்ஐஆர்-யுஜிசி நெட் தேர்வு ஒத்தி வைக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. “25.06.2024 முதல் 27.06.2024 வரை நடைபெறவிருந்த ஜூன்-2024, CSIR-UGC-NET தேர்வு தவிர்க்க முடியாத சூழ்நிலை மற்றும் தளவாடச் சிக்கல்கள் காரணமாக ஒத்திவைக்கப்படுவதாகத் தேர்வர்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் தேர்வை நடத்துவதற்கான திருத்தப்பட்ட அட்டவணை அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் பின்னர் அறிவிக்கப்படும்” என்று தேசிய தேர்வு முகமை இன்று இரவு வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT