காஞ்சிபுரம் நகராட்சி ஒப்பந்ததாரர் சுடர்மணி கைது 
செய்திகள்

ஆபாசமாக பெண் மாநகராட்சி ஆணையாளர் குறித்து ஆடியோவில் அவதூறு.... ஒப்பந்ததாரர் கைது!

கே.காமராஜ்

ஒப்பந்தத்தை ரத்து செய்ததால் ஏற்பட்ட ஆத்திரத்தில் பெண் மாநகராட்சி ஆணையாளர் மீது அவதூறு பரப்பும் வகையில் ஆடியோக்களை வெளியிட்ட நகராட்சி ஒப்பந்ததாரரை தஞ்சை போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

காஞ்சிபுரம் நகராட்சியின் ஆணையராக பணியாற்றி வந்த மகேஸ்வரி என்பவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தஞ்சை மாநகராட்சி ஆணையராக நியமிக்கப்பட்டார். இந்த நிலையில், மகேஸ்வரி காஞ்சிபுரம் நகராட்சி ஆணையராக பணியாற்றிய போது விதிமுறைகளை மீறி நகராட்சி ஒப்பந்ததாரர் சுடர்மணி என்பவர் பணி செய்யாமல் இருந்ததால் அவரது ஒப்பந்தத்தை ரத்து செய்துள்ளார்.

தஞ்சாவூர் மாநகராட்சி

பணி மாற்றலாகி தஞ்சாவூர் சென்றுவிட்ட நிலையில், சுடர்மணி உள்நோக்கத்தோடு மகேஸ்வரி குறித்து அவதூறுகளை பரப்பி வந்துள்ளார். குறிப்பாக பாலியல் ரீதியாக இழிவுபடுத்தி ஆடியோ பதிவிட்டு வாட்ஸ் அப், ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் அவர் கருத்துக்களை பரப்பி வந்துள்ளார்.

இந்த நிலையில் இது குறித்து தகவல் அறிந்த மகேஸ்வரி, தன்னை இழிவாகவும் அவதூறாகவும் பேசிவரும் ஒப்பந்ததாரர் சுடர்மணி மற்றும் மன்னார்குடியைச் சேர்ந்த பாலு ஆகியோர் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி தஞ்சை மேற்கு காவல் நிலையத்தில் கடந்த 2-ம் தேதி புகார் அளித்திருந்தார்.

தஞ்சை நகர மேற்கு காவல் நிலையம்

இந்த புகாரின் பேரில் சுடர்மணியை தேடி வந்த போலீஸார், தகவல் தொழில்நுட்பங்களை தவறாக பயன்படுத்துதல், பெண் வன்கொடுமை உள்ளிட்ட மூன்று பிரிவுகளின் கீழ் சுடர்மணி மீது வழக்குப் பதிவு செய்தனர். பின்னர் காஞ்சிபுரத்தில் தலைமறைவாக இருந்த அவரை, நேற்று கைது செய்து தஞ்சை அழைத்து வந்தனர். தொடர்ந்து தஞ்சை மேற்கு காவல் நிலையத்தில் வைத்து விசாரணை நடத்திய போலீஸார், பின்னர் சுடர்மணியை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

SCROLL FOR NEXT