பெட்ரோல் நிரப்பும்போது செல்போன் பயன்பாட்டால் தீ விபத்து 
செய்திகள்

அதிர்ச்சி வீடியோ... பெட்ரோல் நிரப்பும் போது செல்போன் பயன்பாடு: தீப்பிடித்ததால் அலறிய வாகன ஓட்டி!

வ.வைரப்பெருமாள்

மகாராஷ்டிரா மாநிலத்தின், அகமது நகர் நெடுஞ்சாலையில் பெட்ரோல் நிரப்பிய போது, வாகன ஓட்டி செல்போன் பயன்படுத்தியதால் தீ விபத்து ஏற்பட்ட வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

மகாராஷ்டிரா மாநிலம், அகமது நகர் நெடுஞ்சாலையில் ஒரு பெட்ரோல் பங்கில் எரிபொருள் நிரப்பப்பட்டபோது இருசக்கர வாகனம் திடீரென தீப்பிடித்தது.

இந்த சம்பவத்தின் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் இருசக்கர வாகன ஓட்டி, தனது மொபைல் போனில் குறுஞ்செய்தி வரவும், போனை எடுத்துப் பார்த்துள்ளார்.

அப்போது, திடீரென பெட்ரோல் டேங்கில் தீப்பிடித்தது. இதனால் வாகன ஓட்டி அலறியபடி வாகனத்தை பம்ப் அருகில் இருந்து நகர்த்திச் சென்றார். இதனை அறிந்த பெட்ரோல் நிரப்பும் ஊழியர் விரைந்து செயல்பட்டு தீ அணைக்கும் கருவியைப் பயன்படுத்தி விரைவாக தீயை அணைத்தார்.

ஊழியரின் சமயோசிதமான செயல்பாடு காரணமாக இருவரும் காயமின்றி உயிர் தப்பினர். அனைத்து எரிபொருள் நிலைய வளாகங்களிலும் வாகன ஓட்டிகள், வருகையாளர்கள், மொபைல் போனைப் பயன்படுத்தவோ அல்லது சிகரெட் புகைக்கவோ கூடாது என்ற எச்சரிக்கை குறிப்பு உள்ளது. இதனை மீறும்பட்சத்தில் அது தீ விபத்துக்கு வழிவகுக்கிறது.

பெட்ரோல் நிரப்பும்போது செல்போன் பயன்படுத்தியதால் தீ விபத்து

எனினும் பெட்ரோல் நிலையங்களில் 'கியூ ஆர் கோட்' ஸ்கேன் செய்வதன் மூலம் செல்போனை பயன்படுத்தி பணம் செலுத்தும் முறை நடைமுறையில் உள்ளது. எனவே, இது முரண்பாடாக உள்ளது எனவும் சமூக வலைதளங்களில் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

SCROLL FOR NEXT