செய்திகள்

இந்தியா முழுவதும் அழகாக தென்பட்டது… இந்த ஆண்டின் கடைசி சந்திர கிரகணம்!

காமதேனு

2023-ம் ஆண்டின் கடைசி சந்திர கிரகணமான பகுதி நேர சந்திர கிரகணம் நேற்று இரவு இந்தியா முழுவதும் தென்பட்டது. இது ஒரு மணி நேரம் 19 நிமிடங்கள் நீடித்தது.

சூரியன் – சந்திரன் - பூமி ஆகிய மூன்றும் ஒரே நேர் கோட்டில் வரும்போது கிரகணம் ஏற்படுகிறது. சூரியனுக்கும் சந்திரனுக்கும் இடையில் பூமி வந்து, சூரியனின் நேரடிக் கதிர்கள் சந்திரனை ஒளிரவிடாமல் தடுக்கும் போது சந்திர கிரகணம் ஏற்படுகிறது.

கடந்த 14-ம் தேதி சூரிய கிரகணம் ஏற்பட்டது. இது இந்தியாவில் தெரியவில்லை. பொதுவாக சூரிய கிரகணத்தைத் தொடர்ந்து சந்திர கிரகணம் ஏற்படுவதுண்டு. அந்த வகையில் நேற்றிரவு சந்திர கிரகணம் ஏற்பட்டது.

இரவு 1.05 மணிக்கு தொடங்கி அதிகாலை 2.24 மணி வரை ஒரு மணி நேரம் 19 நிமிடங்களுக்கு சந்திர கிரகணம் நீடித்தது. சந்திர கிரகணம் நிகழும்பொழுது இந்தியாவில் நள்ளிரவு என்பதால், சென்னையில் சந்திர கிரகணம் அழகாக தென்பட்டது.

இந்த கிரகணம் இந்தியாவின் அனைத்து பகுதிகளிலும் தென்பட்டது. அதே போல், மேற்கு பசிபிக் பெருங்கடல், ஆஸ்திரேலியா, ஆசியா, ஐரோப்பா, ஆப்பிரிக்கா, அட்லாண்டிக் பெருங்கடல், இந்தியப் பெருங்கடல் உள்ளிட்ட பகுதியில் கிரகணம் தென்பட்டது.

இதற்குமுன் இந்தியாவில் 2022-ம் ஆண்டு நவம்பர் 8-ஆம் தேதி நிகழ்ந்த முழு சந்திர கிரகணம் தென்பட்டது. அதுதான் கடைசியாக இந்தியாவில் தென்பட்ட சந்திர கிரகணம். அடுத்ததாக வரும் 2025-ம் ஆண்டு செப்டம்பர் 7-ம் தேதி நிகழ உள்ள சந்திர கிரகணம் இந்தியாவில் தென்படும். அது முழு சந்திர கிரகணமாக இருக்கும் இன்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT