தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் 
செய்திகள்

குவைத் தீ விபத்து: அமைச்சர் செஞ்சி மஸ்தானுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் அவசர ஆலோசனை!

வ.வைரப்பெருமாள்

குவைத் தீ விபத்தில் உயிரிழந்த மற்றும் பாதிக்கப்பட்ட தமிழர்களின் குடும்பத்தினருக்கு உதவுவது தொடர்பாக அயலக நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் மற்றும் துறை அதிகாரிகளுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தி வருகிறார்.

குவைத்தின் மெங்காஃப் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் ஒரே நிறுவனத்தில் பணியாற்றிய சுமார் 200 பேர் வசித்து வந்தனர். இவர்களில் பெரும்பாலோனார் இந்தியாவின் தமிழ்நாடு மற்றும் கேரளம் உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்தவர்களாவர். இந்நிலையில் குடியிருப்பின் ஒரு தளத்தின் சமயலறையில் ஏற்பட்ட தீ விபத்து பல்வேறு தளங்களுக்கும் பரவியது.

குவைத்தில் இந்தியர்கள் தங்கியிருந்த கட்டிடத்தில் தீ விபத்து

இதில் தீ விபத்தில் காயமடைந்தது, புகையால் ஏற்பட்ட மூச்சுத் திணறல், தப்பிப்பதற்காக மாடியிலிருந்து குதித்தது போன்ற காரணங்களால் இதுவரை 50க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

இவர்களில் தமிழகத்தைச் சேர்ந்த 5 பேர் வரை உயிரிழந்துள்ளதாகவும், இந்நிலையில் இன்று காலை செய்தியாளர்களை சந்தித்த தமிழக அயலக நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் தூதரகம் மூலம் முதல்கட்டமாக கிடைத்த தகவலின்படி தமிழகத்தைச் சேர்ந்த 5 பேர் உயிரிழந்துள்ளதாகவும், அதிகாரப்பூர்வ தகவலுக்காக காத்திருப்பதாகவும் தெரிவித்தார்.

இந்நிலையில் அமைச்சர் செஞ்சி மஸ்தான் மற்றும் தமிழக அயலக நலத்துறை அதிகாரிகள் உள்ளிட்டோர் முதல்வர் மு.க.ஸ்டாலினை இன்று காலை அவரது வீட்டில் சந்தித்து, தற்போதைய நிலவரம் குறித்து எடுத்துரைத்தனர்.

முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் செஞ்சி மஸ்தான்

இந்த சந்திப்பின்போது, தமிழ்நாட்டில் பாதிக்கப்பட்டவர்கள் குடும்பத்தினருக்கு உடல்களை மீட்டுத் தரவும், காயமடைந்தவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்க வேண்டிய நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் அமைச்சர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு முதல்வர் அறிவுறுத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தற்போதைய தகவல்கள் படி, தமிழகத்தில் ராமநாதபுரம், தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி மற்றும் கோவையை சேர்ந்தவர்கள் குவைத்தில் சிக்கியிருப்பது தெரியவந்துள்ளது. அவர்களின் நிலை என்ன என்பது குறித்து இன்னும் உறுதியான தகவல்கள் தெரியவரவில்லை.

SCROLL FOR NEXT