கள்ளக்குறிச்சி விஷச்சாராய உயிரிழப்புகள் 56 ஆக அதிகரிப்பு 
செய்திகள்

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய உயிரிழப்புகள்... பலி எண்ணிக்கை 56 ஆக உயர்வு

கே.காமராஜ்

கள்ளக்குறிச்சியில் விஷச்சாராயம் அருந்தி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மேலும் ஒருவர் உயிரிழந்ததை தொடர்ந்து உயிரிழப்பு எண்ணிக்கை 56 ஆக அதிகரித்துள்ளது.

கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரம் பகுதியில் கள்ளச்சாராயம் அருந்திய நூற்றுக்கும் மேற்பட்டோர் அடுத்தடுத்து உடல் நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். கள்ளக்குறிச்சி, விழுப்புரம், சேலம் அரசு மருத்துவமனைகள் மற்றும் புதுச்சேரியில் உள்ள ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 160 பேரில் 55 பேர் அடுத்தடுத்து சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். மேலும் பலரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்து இருந்த நிலையில், அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனை

இந்த சம்பவத்தை அடுத்து மாநிலம் முழுவதும் கள்ளச்சாராயத்தை ஒழிப்பதற்கான நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசு தீவிரப்படுத்தி உள்ளது. குறிப்பாக கள்ளக்குறிச்சி மாவட்டத்தின் கல்வராயன் மலைப்பகுதிகளில் போடப்பட்டிருந்த சாராய ஊரல்களை அழிப்பதில் போலீஸார் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த மதன் என்பவர் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனால் விஷச்சாராயம் அருந்தி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 56 ஆக அதிகரித்துள்ளது.

கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

கள்ளச்சாராய விற்பனை விவகாரத்தில் விசாரணை நடத்தி வரும் சிபிசிஐடி போலீஸார், இதுவரை 10க்கும் மேற்பட்டோரை கைது செய்துள்ளனர். முக்கிய குற்றவாளியான கோவிந்தராஜ் என்கிற கண்ணுக்குட்டியிடம் தீவிர விசாரணை நடைபெற்று வருகின்றது. இதனிடையே மெத்தனால் விற்பனை தொடர்பாக சென்னையில் பதுங்கியிருந்த சிவக்குமார் உட்பட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

SCROLL FOR NEXT