ஐஎஸ்ஐஎஸ்-கே அமைப்பினர் 
செய்திகள்

அமெரிக்காவில் நடைபெறும் இந்தியா-பாகிஸ்தான் டி20 உலகக்கோப்பை போட்டிக்கு குறி... ட்ரோன் தாக்குதலுக்கு ஐஎஸ்ஐஎஸ்-கே திட்டம்

எஸ்.எஸ்.லெனின்

அமெரிக்காவில் நடைபெறும் இந்தியா - பாகிஸ்தான் டி20 உலகக் கோப்பை போட்டியை குறிவைத்து ட்ரோன் தாக்குதல் மூலம் நாசவேலைக்கு ஐஎஸ்ஐஎஸ்-கே பயங்கரவாத அமைப்பு திட்டமிட்டுள்ளதாக அமெரிக்க போலீஸார் தெரிவித்துள்ளனர்.

அடுத்த மாதம் அமெரிக்காவில் நடைபெற உள்ள இந்தியா-பாகிஸ்தான் இடையிலான உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியை குறிவைத்து தாக்குதல் நடத்த ஐஎஸ்ஐஎஸ்-கே அமைப்பு அழைப்பு விடுத்துள்ளது. இதனையடுத்து அங்கே கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கு உத்தரவாகி உள்ளன. பயங்கரவாத குழு சார்பிலான தாக்குதலுக்கு பகிரங்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகவும், ஜூன் 6 அன்று டி20 போட்டிக்கு திட்டமிடப்பட்டிருக்கும் நாசாவ் கவுண்டியின் போலீஸ் கமிஷனர் பேட்ரிக் ரைடர் தெரிவித்துள்ளார்.

இந்தியா-பாகிஸ்தான் கிரிக்கெட் அணியினர்

’ஐஎஸ்ஐஎஸ் கோராசன்’ அமைப்பின் உலகமெங்கும் பரவிக்கிடக்கும் ஸ்லீப்பர் செல்கள் இந்த பகிரங்க தாக்குதலுக்கான அழைப்பை ஏற்று தயாராகி வருவதாகவும் போலீஸார் கண்டறிந்துள்ளனர். இந்த பயங்கரவாத அமைப்புகளின் ஸ்லீப்பர் செல் உறுப்பினர்கள் மற்றும் அனுதாபிகள், இவ்வாறு தங்களது தலைமையிடமிருந்து பகிரங்க அழைப்புகள் மற்றும் சமூக ஊடக சங்கேத தகவல்களை எடுத்துக்கொண்டு சுயாதீனமாக செயல்படக் கூடியவர்கள். இதனால் இவர்களை கண்டறிவதும் போலீஸாருக்கு கடினமாக அமைந்துவிடுகின்றன.

இவற்றையொட்டி நியூயார்க் கவர்னர் கேத்தி ஹோச்சுல், "அதிகப்படி சட்ட அமலாக்கம், மேம்பட்ட கண்காணிப்பு செயல்முறைகள் உட்பட உயர்ந்த பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபட நியூயார்க் மாநில காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளேன்" என்று கூறியுள்ளார். நியூயார்க் நகரின் எல்லையில் உள்ள நாசாவ் கவுண்டியின் தலைவர் புரூஸ் பிளேக்மேன் அங்கே மேற்கொள்ளப்பட்டு வரும் அமெரிக்க அதிபருக்கு இணையான பாதுகாப்பு நடைமுறைகளையும், 30 ஆயிரம் பேர் அமரக்கூடிய ஐசன்ஹோவர் பூங்காவில் உள்ள கிரிக்கெட் மைதானத்தில் கூடுதல் போலீஸ் அதிகாரிகள் குவிக்கப்படுவதையும் உறுதி செய்துள்ளார்.

தெற்கு மற்றும் மத்திய ஆசியாவில் செயல்படும் இஸ்லாமிய அரசு பயங்கரவாத அமைப்பின் கிளையான ஐஎஸ்ஐஎஸ்-கொராசான் சாட்டிங் குழுவில் பரிமாறப்பட்ட சதித்திட்டம் முன்னரே கண்டறியப்பட்ட போதும், தற்போதைய பகிரங்க அச்சுறுத்தல் அமெரிக்காவில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இவற்றையொட்டி கடந்த ஒரு மாத காலமாக அமெரிக்காவில் ஐஎஸ்ஐஎஸ்-கே அமைப்பின் தடங்கள் குறித்து பாதுகாப்பு அமைப்புகள் தீவிர புலனாய்வு செய்து வருகின்றன.

மாஸ்கோ துப்பாக்கிச்சூடு சம்பவம்

நாசாவ் கவுண்டியின் ஐசன்ஹோவர் பூங்காவில் உள்ள கிரிக்கெட் ஸ்டேடியத்தின் மீது வெடிமருந்து நிரப்பிய ட்ரோன்கள் மூலம் தாக்குதல் நடத்த திட்டமிட்டிருப்பதாகவும், பிரிட்டன் பின்னணியிலான ஐஎஸ்ஐஎஸ்-கே சமூக ஊடக அரட்டை ஒன்றிலிருந்து அமெரிக்க புலனாய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். இதனையடுத்து போட்டி நடைபெறும் மைதானம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளை ட்ரோன்கள் பறப்பதற்கு தடைவிதித்தும் உத்தரவு பிறப்பிக்க உள்ளனர்.

பாகிஸ்தானில் பல்வேறு தாக்குதல்களை நடத்தியதுடன், இந்தியாவுக்கு எதிராகவும் பயங்கரவாத தாக்குதல்களை ஐஎஸ்ஐஎஸ்-கே விடுத்து வருவது குறிப்பிட்டத்தக்கது. முன்னதாக மார்ச் மாதம், ஐஎஸ்ஐஎஸ்-கே பயங்கரவாதிகள் ரஷ்யாவின் மாஸ்கோ இசைக்கச்சேரி அரங்கில் தாக்குதல் நடத்தியதில் சுமார் 130 பேர் கொல்லப்பட்டனர்.

SCROLL FOR NEXT