இந்திய பிரதமர் மோடி - கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ 
செய்திகள்

காலிஸ்தானி பயங்கரவாதிக்கு கனடா நாடாளுமன்றம் கவுரவம்: இந்தியா கடும் கண்டனம்

எஸ்.எஸ்.லெனின்

காலிஸ்தானி ஆதரவு பயங்கரவாதியான ஹர்தீப் சிங் நிஜ்ஜாருக்கு, கனடா நாடாளுமன்றம் கவுரமளித்தது தொடர்பாக இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

இந்தியாவின் இறையாண்மைக்கு எதிராகவும், பிரிவினைக்கு ஆதரவாகவும் செயல்படும் பயங்கரவாத குழுக்களுக்கு கனடா தொடர்ந்து ஆதரவளித்து வருகிறது. கனடாவின் இத்தகைய போக்குக்கு எதிராக இந்தியா தொடர்ந்து கண்டனம் தெரிவித்தும் வருகிறது.

இந்த வகையில் கடந்த ஆண்டு கனடாவில் கொல்லப்பட்ட காலிஸ்தானி பயங்கரவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜாரின் நினைவாக அண்மையில் கனடா நாடாளுமன்றம் ஒரு நிமிடம் மௌனம் கடைப்பிடித்தது. சபாநாயகர் கிரெக் பெர்கஸ் அறிவிப்பை அடுத்து எம்.பி-க்கள் அனைவரும் மௌனம் கடைப்பிடித்த நிகழ்வு காணொளியாக வெளியாகி இந்தியாவை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

ஹர்தீப் சிங் நிஜ்ஜார்

பயங்கரவாதக் குழுவான ’காலிஸ்தானி டைகர் ஃபோர்ஸ்’ என்ற அமைப்பை சேர்ந்த நிஜ்ஜார் இந்தியாவின் பயங்கரவாத தடுப்பு அமைப்பான என்ஐஏ-வால் தேடப்பட்ட நபராவார். கடந்த ஜூலை மாதம், பஞ்சாப் மாநிலம் ஜலந்தரில் இந்து சாமியார் ஒருவர் கொல்லப்பட்ட வழக்கில் நிஜ்ஜாரின் தலைக்கு ரூ.10 லட்சம் ரொக்கப் பரிசு அறிவித்திருந்தது. இது தவிர்த்தும் பல்வேறு வழக்குகள் நிஜ்ஜாருக்கு எதிராக இருந்தன.

இந்த நிஜ்ஜாருக்கு கனடா நாடாளுமன்றம் கவுரவம் அளித்ததை, "பயங்கரவாதத்திற்கு அரசியல் இடம் கொடுக்கும் மற்றும் வன்முறைக்கு ஆதரவளிக்கும் எந்தவொரு நடவடிக்கையையும் இயல்பாகவே இந்தியா எதிர்க்கும்" என்று வெளியுறவு அமைச்சகம் தனது வாராந்திர செய்தியாளர் சந்திப்பை முன்னிட்டு இன்றைய தினம் தெரிவித்துள்ளது.

கனடா - இந்தியா

முன்னதாக நிஜ்ஜாரின் கொலை சம்பவத்தை முன்வைத்து இந்தியா - கனடா இடையிலான சுமூகம் கெட்டது. கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, தங்கள் தேசத்து குடிமகனான நிஜ்ஜாரைக் கொன்றதில் இந்திய அரசின் ஏஜெண்டுகள் ஈடுபட்டதாக குற்றம்சாட்டினார். அந்த குற்றச்சாட்டுகள், இரு நாடுகளுக்கும் இடையே பதட்டமான சூழலுக்கு வழிவகுத்தது.

கனடாவின் குற்றச்சாட்டுகளை இந்தியா உறுதியாக நிராகரித்ததோடு, அவற்றை அபத்தமானது என்றும் அழைத்தது. குறிப்பாக ’இந்தியாவுக்கு எதிரான தனது குற்றச்சாட்டுக்கு வலுசேர்க்க எந்த வகையான ஆதாரத்தையும் கனடா இன்னும் வழங்கவில்லை’ என்று சாடியது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT