கணேசன் 
செய்திகள்

உள்துறை செயலர் உத்தரவில் சேலம் க்ரைம் இன்ஸ்பெக்டர் டிஸ்மிஸ்... 8 ஆண்டுகள் கழித்து கணக்கு தீர்த்தது லஞ்சப் புகார்

காமதேனு

8 ஆண்டுகளுக்கு முந்தைய லஞ்சப் புகாரின் கீழ் தற்போது சேலம் மாநகர குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டரான கணேசன் என்பவர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

சேலம் மாநகர குற்றப்பிரிவு ஆய்வாளராக பணியாற்றிய கணேசன், லஞ்சப் புகார் ஒன்றில் பணி நீக்க நடவடிக்கைக்கு ஆளாகி உள்ளார். இவர் இதற்கு முன்னதாக பணியாற்றிய காவல் நிலையங்களில் பழனி டவுன் ஸ்டேஷனும் ஒன்று. 2016-ல் அங்கு சப்-இன்ஸ்பெக்டராக கணேசன் பணியாற்றியபோது அவருக்கு எதிரான லஞ்சப் புகார் ஒன்று பெரிதாக வெடித்தது.

லஞ்சம்

நிலப்பிரச்சினை ஒன்றில் குறிப்பிட்ட தரப்பினரிடம் லஞ்சம் கேட்டதாக பழனி டவுன் காவல் நிலையத்தின் இன்ஸ்பெக்டராக இருந்த சண்முக சுந்தரம் மற்றும் சப்-இன்ஸ்பெக்டரான கணேசன் ஆகியோருக்கு எதிரான புகார்கள் வெடித்தன. இந்த புகார் பின்னணியிலான வீடியோக்களும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின.

புகாரளிக்க வந்தவர்களிடமே லஞ்சம் கேட்ட போலீஸார் என்ற குற்றச்சாட்டு பெரிதாக வளர்ந்ததில், உயரதிகாரிகள் அது தொடர்பான விசாரணைக்கு உத்தரவிட்டனர். போலீஸ் அதிகாரிகளுக்கு எதிரான லஞ்சப் புகார் தொடர்பான விசாரணை நிறைவடைந்து, அதன் அறிக்கை பின்னர் உள்துறை செயலருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த அறிக்கையின் அடிப்படையில் தமிழக உள்துறை செயலர் அமுதா, போலீஸ் அதிகாரி கணேசனை பணி நீக்கம் செய்ய உத்தரவிட்டார்.

கணேசன்

அதன்படி சேலம் மாநகர காவல் ஆணையரான விஜயகுமாரி, கணேசனின் பணி நீக்கம் ஆணையை அவரிடமே நேரில் வழங்கினார். லஞ்சப் புகார் ஒன்றின் விசாரணை, அறிக்கை தாக்கல், அதன் பின்னரான நடவடிக்கை என 8 ஆண்டுகளாக நீடித்த இழுபறி ஒருவழியாக முடிவுக்கு வந்திருக்கிறது.

SCROLL FOR NEXT