உளுந்தூர்பேட்டை ஆட்டுச்சந்தையில் ஆடுகள் விற்கவும், வாங்கவும் குவிந்த வியாபாரிகள் 
செய்திகள்

களை கட்டிய பக்ரீத் ஆடு விற்பனை... 3 மணி நேரத்தில் ரூ.5 கோடிக்கு வியாபாரம்!

கே.காமராஜ்

உளுந்தூர்பேட்டையில் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு நடைபெற்ற ஆட்டுச் சந்தையில் சுமார் 3 மணி நேரத்தில் 5 கோடி ரூபாய்க்கு ஆடுகள் விற்பனை நடைபெற்றது.

கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டையில் வாரந்தோறும் ஆட்டுச் சந்தை நடப்பது வழக்கம். இதில் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான வியாபாரிகள் வந்து ஆடுகளை வாங்கிச் செல்வார்கள். வருகிற ஜூன் 16 மற்றும் 17ம் தேதிகளில் பக்ரீத் பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில் ஆட்டு சந்தை களைக்கட்ட துவங்கியிருக்கிறது.

பக்ரீத் பண்டிகையை ஒட்டி ஆடு விற்பனை அமோகம்

இதையொட்டி பக்ரீத் பண்டிகைக்கு முன்பு உளுந்தூர்பேட்டையில் ஒவ்வொரு ஆண்டும் சிறப்பு ஆட்டுச் சந்தை நடப்பது வழக்கம். இந்த ஆண்டுக்கான ஆட்டுச் சந்தை இன்று நடைபெற்றது. அதிகாலை 4 மணி முதல் ஆடுகள் விற்பனை தொடங்கியது. விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், ராமநாதபுரம், திருச்சி, சேலம், வேலூர் உட்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் ஆடுகளை வாங்குவதற்காக சந்தையில் குவிந்தனர்.

3 மணி நேரத்தில் 5 கோடி ரூபாய்க்கும் மேல் வணிகம் நடைபெற்றதால் ஆட்டு வியாபாரிகள், விவசாயிகள் மகிழ்ச்சி

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து ஆயிரக்கணக்கான வியாபாரிகளும், விவசாயிகளும் ஆடுகளை விற்பனை செய்வதற்காக கொண்டு வந்திருந்தனர். சுமார் 6,000 ஆடுகளுக்கு மேல் விற்பனைக்கு வந்திருந்த நிலையில், ஒரு ஆடு 7 ஆயிரம் முதல் 12 ஆயிரம் ரூபாய் வரை விற்பனையானது. சுமார் 3 நேரத்திற்குள் 5 கோடி ரூபாய்க்கும் மேல் ஆடுகள் விற்பனை நடைபெற்றது. வழக்கத்தை விட இன்று அதிக அளவில் ஆடுகள் விற்பனைக்கு வந்தும், கூடுதல் விலைக்கு ஆடுகள் விற்பனையானதால் வியாபாரிகள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

இதே போல் தமிழகத்தின் பல்வேறு ஆட்டுச்சந்தைகளிலும், பல கோடி ரூபாய் அளவிற்கு ஆடுகள் விற்பனையானது.

SCROLL FOR NEXT