தீ விபத்து ஏற்பட்ட இந்தூர் பாஜக அலுவலகம் 
செய்திகள்

பற்றி எரிந்த பாஜக அலுவலகம்... இந்தூரில் பரபரப்பு!

கவிதா குமார்

பிரதமராக நரேந்திர மோடி மூன்றாவது முறையாக பதவியேற்றத்தை பட்டாசு வெடித்து கொண்டாடிய போது திடீரென பாஜக அலுவலகத்தில் தீப்பிடித்துக் கொண்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவில் ஏழு கட்டங்களாக நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகள் வெற்றி பெற்றன. இதனையடுத்து அக்கட்சிகள் சார்பில் பிரதமராக நரேந்திர மோடி தேர்ந்தெடுக்கப்பட்டார். டெல்லியில் நேற்று மூன்றாவது முறையாக பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்றுக் கொண்டார். இதனை நாடு முழுவதும் பாஜகவினர் பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் கொண்டாடினர். அப்படி நடைபெற்ற ஒரு சம்பவம் தான், தீ விபத்திற்குக் காரணமாகி விட்டது.

மோடி மீண்டும் பிரதமரானதைக் கொண்டாடும் வகையில் மத்தியப் பிரதேசம் மாநிலம், இந்தூரில் உள்ள பாஜகவினர் நேற்று இரவு பட்டாசு வெடித்து கொண்டாடினர். அப்போது பட்டாசு வெடித்து பாஜக அலுவலகத்தின் மேற்கூரையில் விழுந்தது. இதனால் மேற்கூரையில் இருந்த மரச்சாமான்கள் தீப்பிடித்து எரிந்தன.

இதுகுறித்து தகவல் அறிந்த தீயணைப்புத்துறையினர் விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். நான்கு மாடி கட்டிடம் கொண்ட பாஜக அலுவலகத்தின் மேற்கூரையில் பிடித்த தீயை தீயணைப்பு வீரர்கள் போராடி அணைத்தனர்.

இந்த தீ விபத்தில் நல்வாய்ப்பாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை. ஆனால், பாஜக அலுவலகத்தில் இருந்த சோபா மற்றும் பொருட்கள் தீப்பிடித்து எரிந்தன. இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

SCROLL FOR NEXT