மக்களவையில் பேசிய அகிலேஷ் யாதவ் 
செய்திகள்

உ.பி.யில் எல்லா தொகுதிகளிலும் வெற்றி பெற்றாலும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை நம்பப் போவதில்லை: அகிலேஷ் யாதவ் பேச்சு

வ.வைரப்பெருமாள்

உத்தரப் பிரதேசத்தில் 80 மக்களவைத் தொகுதிகளிலும் வெற்றி பெற்றாலும், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை நம்பப் போவதில்லை என சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ளார்.

இந்த ஆண்டு மக்களவைத் தேர்தலுக்கு முன்னதாக மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் (இவிஎம்) ஹேக் செய்யப்படலாம் அல்லது முறைகேடுகள் நிகழ்த்தப்படலாம் என எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டுகளை முன்வைத்தன.

மேலும், இவிஎம் மீதான நம்பகத்தன்மை குறித்து சந்தேகம் எழுப்பியும், ஒவ்வொரு வாக்குக்கும், வாக்காளர் சரிபார்க்கும் காகித தணிக்கைக்கு (விவிபாட்) உத்தரவிட கோரியும், உச்சநீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. ஆனால் இந்த கோரிக்கையை உச்சநீதிமன்றம் நிராகரித்துவிட்டது.

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம்

இந்நிலையில் தேர்தல் முடிவடைந்து மீண்டும் மத்தியில் பாஜக கூட்டணி ஆட்சி அமைத்தது. தற்போது 18வது மக்களவையின் முதல் கூட்டத் தொடர் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் உத்தரப் பிரதேசத்தில் 80 மக்களவைத் தொகுதிகளிலும் வெற்றி பெற்றாலும், இவிஎம் இயந்திரங்களை நம்பப் போவதில்லை என சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ளார்.

மக்களவையில் குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தில் அவர் பேசியதாவது:

“நான் நேற்று இவிஎம்- இயந்திரங்களை நம்பவில்லை. இன்றும் அவற்றை நம்பவில்லை. உத்தரப் பிரதேசத்தில் 80 தொகுதிகளிலும் வெற்றி பெற்றாலும், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை நான் நம்ப மாட்டேன். இது எப்போதும் ஒரு பிரச்சினையாகவே இருக்கும். எங்கள் கட்சி இதில் உறுதியாக இருக்கும். இவிஎம்-இயந்திரங்கள் மூலம் நாங்கள் வெற்றி பெற்றாலும் அதை அகற்றுவோம்.

இவிஎம் பயன்பாடு நிறுத்தப்படும் வரை அது குறித்த பிரச்சினை ஒருபோதும் தீர்க்கப்படாது. அதனை அகற்றுவதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம்.”

இவ்வாறு அகிலேஷ் யாதவ் பேசினார்.

SCROLL FOR NEXT