நாடாளுமன்ற கூட்டுக் கூட்டத்தில் உரையாற்றிய குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு 
செய்திகள்

70 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் இலவச சிகிச்சை: குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு அறிவிப்பு

வ.வைரப்பெருமாள்

அரசியல் சாசனம் மீதான நேரடி தாக்குதலின் மீதான மிகப்பெரிய இருண்ட அத்தியாயம் அவசர நிலை பிரகடனம் என குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு நாடாளுமன்ற கூட்டு கூட்டத்தில் உரையாற்றினார்.

18வது மக்களவையின் இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு இன்று உரையாற்றினார்.

அப்போது அவர் கூறியதாவது, “இன்று ஜூன் 27. ஜூன் 25, 1975 அன்று அமல்படுத்தப்பட்ட அவசர நிலை அரசியலமைப்பின் மீதான நேரடித் தாக்குதலின் மிகப்பெரிய மற்றும் இருண்ட அத்தியாயமாகும். இதனால் ஒட்டுமொத்த நாடும் கோபமடைந்தது. ஆனால், குடியரசின் மரபுகளால், அரசியலமைப்புக்கு விரோதமான சக்திகளுக்கு எதிராக நாடு வெற்றி பெற்றது.

தேர்வில் இடையூறுகள் ஏற்புடையதல்ல. அரசு ஆட்சேர்ப்பு மற்றும் தேர்வுகளில் புனிதம், வெளிப்படைத்தன்மை அவசியம். சமீபத்திய வினாத்தாள் கசிவு சம்பவங்களில் நியாயமான விசாரணை நடத்தவும், குற்றவாளிகளுக்கு மிகக் கடுமையான தண்டனை வழங்கவும் அரசு உறுதி பூண்டுள்ளது.

மூன்றாவது முறையாக தேசிய ஜனநாயக கூட்டணி அரசு பதவியேற்றுள்ளது, ஆட்சியின் மீது மக்கள் கொண்டுள்ள நம்பிக்கையை காட்டுகிறது. ஆறு தசாப்தங்களுக்குப் பிறகு இது நடந்துள்ளது. சீர்திருத்தம், செயல்திறன் மற்றும் மாற்றம் ஆகியவை இந்தியாவை உலகிலேயே வேகமாக வளரும் பொருளாதாரமாக மாற்றியுள்ளது.

ஆயுஷ்மான் பாரத்-பிரதான் மந்திரி ஜன ஆரோக்ய யோஜனா (ஏபி-பிஎம்ஜேஏவை) திட்டத்தின் கீழ் 55 கோடி பயனாளிகளுக்கு இலவச சுகாதார சேவைகள் வழங்கப்பட்டுள்ளன.

நாடாளுமன்றத்துக்கு அழைத்துவரப்பட்ட குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு

இந்த விஷயத்தில் அரசு மற்றொரு முடிவை எடுக்க உள்ளது. இப்போது 70 வயதுக்கு மேற்பட்ட அனைத்து முதியவர்களும் ஆயுஷ்மான் பாரத் யோஜனா திட்டத்தின் கீழ் இலவச சிகிச்சையின் பலனைப் பெறுவார்கள்.” இவ்வாறு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு பேசினார்.

முன்னதாக துணை குடியரசுத் தலைவர் ஜெகதீப் தன்கர், பிரதமர் மோடி, மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா ஆகியோர் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவை, நாடாளுமன்ற கட்டிடத்தின் கஜ துவாரத்தில் மரியாதையுடன் வரவேற்று, செங்கோல் ஏந்திய அதிகாரி தலைமையில் ஊர்வலமாக மக்களவைக்கு அழைத்துச் சென்றனர்.

SCROLL FOR NEXT