அண்ணாமலை, எடப்பாடி பழனிசாமி 
செய்திகள்

முற்றிய மோதல்: 'எடப்பாடி பழனிசாமி நம்பிக்கை துரோகி’ - அண்ணாமலை கடும் தாக்கு

வ.வைரப்பெருமாள்

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நம்பிக்கை துரோகி என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கடும் விமர்சனத்தை முன்வைத்துள்ளார்.

விக்கிரவாண்டி இடைத் தேர்தல் வரும் 10ம் தேதி நடைபெற உள்ள நிலையில் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர். இத்தேர்தலில் பாஜக கூட்டணி சார்பில் போட்டியிடும் பாமக வேட்பாளர் சி.அன்புமணியை ஆதரித்து தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை இன்று பிரச்சாரம் மேற்கொண்டார்.

அதன்பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர் பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்து கூறியதாவது:

"தமிழகத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு விவகாரத்தில் தமிழக அரசு பச்சைப் பொய் சொல்கிறது.

விக்கிரவாண்டியில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அண்ணாமலை

பீகார், கர்நாடகா மாநிலங்களில் அந்தந்த மாநில அரசுகள் கணக்கெடுப்பு நடத்தும்போது, இந்த விவகாரத்தில் திமுக அரசு மத்திய அரசு மீது பழிபோடுகிறது. சாதிவாரி கணக்கெடுப்பு வழக்கில் மாநில அரசுக்கு உரிமை இருக்கிறது என்றுதான் உச்சநீதிமன்றம் கூறியுள்ளது.

சில தலைவர்கள் தங்களுடைய சுய லாபத்துக்காக, அதிகார வெறிக்காக அதிமுகவை அழித்துக் கொண்டிருக்கிறார்கள். அதிமுக தொண்டர்கள் எல்லாம் பாஜகவை நோக்கி பெருமளவில் வந்து கொண்டிருக்கின்றனர்.

இதன் தாக்கத்தை 2024 நாடாளுமன்ற வாக்கு சதவீதத்தில் நாம் பார்த்தோம். நம்பிக்கை துரோகி என்ற பெயர் ஒருவருக்கு பொருந்தும் என்றால் அது எடப்பாடி பழனிசாமிக்குதான். பிரதமர் அவரை தனக்கு பக்கத்திலேயே அமர வைத்தார். சுய லாபத்துக்காக பாஜகவை விட்டு ஒதுங்கிய அதிமுகவுக்கு பல இடங்களில் டெபாசிட் இழக்க வைத்து மக்கள் பாடம் புகட்டினர்.

அண்ணாமலை, எடப்பாடி பழனிசாமி

டெபாசிட் இழப்பில் ஒரு கின்னஸ் ரெக்கார்டாக அதிமுக மாறியுள்ளது. அதிமுக கட்சி சரியாக இருந்தாலும், தலைவர்கள் சரியில்லை என்பதால் மக்கள் தண்டனை அளித்துள்ளனர். நாடாளுமன்றத் தேர்தலில் எடப்பாடி பழனிசாமி 134 வாக்குறுதிகளை அளித்துள்ளார். அவற்றை எப்போது நிறைவேற்றப் போகிறார்? எடப்பாடி பழனிசாமி பேசுவதற்கு முன்பு சிந்தித்துப் பேச வேண்டும்.

கோவையில், சிறிது வாக்குகள் வித்தியாசத்தில் டெபாசிட் வாங்கிய நிலையில், விமான நிலையத்தில் வீர வசனம் பேசிக் கொண்டிருக்கிறார். கோவை அதிமுக கோட்டையாக உள்ள நிலையில் அவர்களை விட இரண்டு மடங்கு அதிகமாக பாஜக அங்கு வாக்குகளைப் பெற்றுள்ளது.

எடப்பாடி பழனிசாமி

அதிமுக டெபாசிட் இழந்து கரையானை போல கரைந்து கொண்டிருக்கிறது. ஆனால், அவர் எனக்கு அறிவுரை கூறிக் கொண்டிருக்கிறார். பாஜக மத்தியில் 3வது முறையாக தொடர்ந்து ஆட்சிக்கு வந்துள்ளது. ஆனால் அதிமுக எத்தனை தோல்விகளை சந்தித்துள்ளது? ஈரோடு இடைத் தேர்தலில் ஓபிஎஸ்-ஐ பின்வாங்கச் செல்லுமாறு எடப்பாடி பழனிச்சாமி என்னிடம் தொலைபேசியில் சொன்னார். இதுதான் ஈரோடு இடைத்தேர்தல் ரகசியம். ஈரோட்டில் போட்டியிலிருந்து விலகிய ஓபிஎஸ்-ற்கு அதிமுக என்ன மரியாதை கொடுத்தது? ஈரோடு இடைத்தேர்தல் தொடர்பாக எடப்பாடி பழனிசாமி கூறிய கருத்தை நான் கண்டிக்கிறேன்.”

இவ்வாறு அண்ணாமலை கூறினார்.

SCROLL FOR NEXT