டெல்லி விமான நிலைய மேற்கூரை இடிந்து விபத்து 
செய்திகள்

டெல்லி விமான நிலைய விபத்து பலி எண்ணிக்கை 3 ஆக உயர்வு... மோடி மீது வலுக்கும் கண்டனம்!

கவிதா குமார்

தொடர் மழை காரணமாக டெல்லி விமான நிலையத்தின் மேற்கூரை இடிந்து விழுந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3 ஆக அதிகரித்துள்ளது

இந்தியாவின் தலைநகரான டெல்லியில் கனமழை பொழிந்து வருகிறது. இதன் காரணமாக டெல்லி விமான நிலைய மேற்கூரை இன்று அதிகாலை இடிந்து விழுந்தது. இதனால் அங்கு நிறுத்தி வைத்திக்கப்பட்டிருந்த கார்கள் பலத்த சேதமடைந்தன.

டெல்லி விமான நிலைய மேற்கூரை இடிந்து விபத்து

அவற்றின் உள்ளே சிக்கியிருந்த 7 பேரை தீயணைப்புத்துறையினர் மீட்டனர். இதையடுத்து உடனடியாக அவர்களை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், செல்லும் வழியிலேயே ஒருவர் உயிரிழந்தார். மேலும் 6 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர். இந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதில் மேலும் இருவர் உயிரிழந்தனர். இதன் காரணமாக இந்த விபத்தில் மூன்று பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்த விபத்து காரணமாக டெர்மினல் 1 பகுதியில் தற்காலிகமாக விமான சேவை நிறுத்தப்பட்டுள்ளது. செக்-இன் கவுண்டர்களும் மூடப்பட்டுள்ளன. தேர்தலுக்காக அவசர கதியில் விமான நிலைய டெர்மினல் திறக்கப்பட்டது தான் இந்த விபத்திற்கு காரணம் என மத்திய அரசை காங்கிரஸ் உள்பட பல்வேறு எதிர்கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன.

இந்த நிலையில் திரிணமூல் காங்கிரஸ் எம்.பி சாகேத் கோகலே, டெல்லி விமான நிலைய விபத்து குறித்த படங்களை தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில்," டெல்லி விமான நிலைய மேற்கூரை இன்று காலை இடிந்து விழுந்து இதுவரை 3 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தேர்தல் பிரசாரத்திற்காக, மார்ச் மாதம் 1-ம் தேதி மோடி அவசரமாக இதனைத் திறந்தார். இதைக்கூறி மோடி பிரசாரம் செய்ய ஆசைப்பட்டதால் உயிரிழந்த 3 பேரின் மரணத்திற்கு அவர் நேரடியாகப் பொறுப்பேற்க வேண்டும்" என்று பதிவிட்டுள்ளார்.

SCROLL FOR NEXT