ஐஆர்சிடிசி உணவில் மிதக்கும் கரப்பான்பூச்சி 
செய்திகள்

வந்தே பாரத் ரயிலில் வழங்கிய உணவில் அதிர்ச்சி... ஐஆர்சிடிசி பரிமாறிய கரப்பான்பூச்சி!

எஸ்.எஸ்.லெனின்

வந்தே பாரத் ரயிலில் பயணித்தவருக்கு ஐஆர்சிடிசி பரிமாறிய உணவில் கரப்பான் பூச்சி இருந்தது, சமூக ஊடகங்களில் வைரலாக வெடித்துள்ளது.

போபாலில் இருந்து ஆக்ரா செல்லும் வந்தே பாரத் விரைவு ரயிலில் பயணித்த இளம்ஜோடிக்கு விசித்திர அனுபவம் நேரிட்டுள்ளது. 550 கி.மீ தொலைவிலான பயணத்தை கடக்க சுமார் 7 மணி நேரமாகும் இந்த பயணத்தில் அவர்கள் பசியாற உணவும் வழங்கப்பட்டது. ஆனால் அப்படி கிடைத்த உணவில் தென்பட்ட கரப்பான் பூச்சியால் அந்த ஜோடி அதிர்ச்சி அடைந்தனர்.

விதித் வர்ஷ்னி என்ற நபர், ரயிலில் தனக்கு நேரிட்ட கரப்பான்பூச்சி அனுபவத்தை உடனடியாக எக்ஸ் தளத்தில் பதிவிட்டு பொதுவெளியின் கவனத்தை கவர முயன்றார். அதன் மூலமாக மோசமான சுகாதார சேவைகள் குறித்து புகார் தெரிவித்ததோடு, ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் முதல் இந்திய ரயில்வேயின் கேட்டரிங் மற்றும் டிக்கெட் விற்பனையாளரான ஐஆர்சிடிசி வரை பலரையும் டேக் செய்திருந்தார். கரப்பான் பூச்சியுடன் அவர் பதிவிட்டிருந்த உணவின் படம் உடனடியாக வைரலானது.

உணவு விற்பனையாளர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கக் கோரியதோடு, மேற்கொண்டு இது எவருக்கும் நடக்காமல் இருப்பதை உறுதி செய்யவும் ரயில்வேக்கு கோரிக்கை விடுத்தார். இதற்கு உடனடியாக ஐஆர்சிடிசி பதிலளித்தது. "உங்களுக்கு ஏற்பட்ட மோசமான பயண அனுபவத்திற்காக நாங்கள் மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறோம். இந்த விவகாரம் தீவிரமாகப் பார்க்கப்பட்டு, சம்பந்தப்பட்ட சேவை வழங்குநருக்கு தகுந்த அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அத்தோடு உற்பத்தி மற்றும் தளவாட கண்காணிப்பையும் தீவிரப்படுத்தியுள்ளோம்" என்று விரிவாக பதில் தந்தது.

வந்தே பாரத் ரயில்

அண்மைக்காலமாக வாடிக்கையாளர்களும் அவர்களுக்கு நேரும் வினோத அனுபவங்களும் பொதுவெளியை கலங்கடித்து வருகின்றன. அமேசான் பொட்டலத்தில் சுற்றப்பட்ட உயிருள்ள பாம்பு முதல் ஐஸ்கிரீமில் கண்டுபிடிக்கப்பட்ட துண்டிக்கப்பட்ட விரல் வரை, இந்த சம்பவங்கள் நுகர்வோரை கடுமையாக தொந்தரவு செய்துள்ளன. இந்த வரிசையில் மேற்படி கரப்பான்பூச்சி உணவும் இணையவாசிகளை உலுக்கி வருகிறது.

SCROLL FOR NEXT