குப்பி காவல் நிலையம் 
செய்திகள்

உள்துறை அமைச்சரின் தொகுதியில் குழந்தை கடத்தல் நெட்வொர்க்... கர்நாடகாவில் பரபரப்பு!

கவிதா குமார்

கர்நாடகா உள்துறை அமைச்சரின் தொகுதியான தும்கூரில் குழந்தை கடத்தல் நெட்வொர்க் கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அத்துடன் அக்கும்பலிடமிருந்து 4 குழந்தைகள் மீட்கப்பட்டுள்ளன.

கர்நாடகா மாநிலம், தும்கூரில் உள்ள குப்பி நகரில் ராக்கி என்ற 11 மாதக் குழந்தை ஜூன் 9-ம் தேதி கடத்தப்பட்டது. இச்சம்பவம் தொடர்பாக குப்பி காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. குழந்தைகள் கடத்தல் தொடர்பாக போலீஸார் தீவிர விசாரணை நடத்திய போது அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியானது. குழந்தை கடத்தும் கும்பல் ஒன்று 9 குழந்தைகளை விற்றதாக தகவல் கிடைத்தது.

குழந்தை கடத்தல்

இதன் அடிப்படையில், இந்த செயலில் ஈடுபட்டது மிகப்பெரிய குழந்தை கடத்தல் நெட்வொர்க் இருப்பதை கண்டுபிடித்தனர். அத்துடன் குழந்தைகள் கடத்தலுக்கும், தும்கூரில் உள்ள தனியார் மருத்துவமனை ஊழியர்களுக்கும் தொடர்பு இருப்பதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து அந்த நர்சிங் கல்லூரியில் போலீஸார் விசாரணை நடத்தியதில் குழந்தை கடத்தல் நடைபெற்றது உண்மை எனக் கண்டுபிடிக்கப்பட்டது.

அந்த தனியார் நர்சிங் கல்லூரி மேலாளர் மகேஷ் (39), மருத்துவமனை செவிலியர்கள் பூர்ணிமா (39), சவுஜன்யா (48), சிக்கநாயக்கனஹள்ளியைச் சேர்ந்த மருந்தாளுநர் மஹ்பூப் ஷெரீப் (52), கே.என். ராமகிருஷ்ணப்பா (53), ஹனுமந்தராஜு (45) ஆகியோர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து 1 கார், 50 ஆயிரம் ரொக்கம் மற்றும் 4 செல்போன்களை போலீஸார் நேற்று பறிமுதல் செய்தனர்.

அமைச்சர் ஜி. பரமேஸ்வரா

அவர்களிடம் நடத்திய விசாரணையில்,திருமணத்திற்கு முன் கர்ப்பம் மற்றும் தவறான உறவுகளால் பிறந்த குழந்தைகளையே விற்பதற்கு அவர்கள் தேர்ந்தெடுத்தது தெரிய வந்தது. இப்படியான குழந்தைகளைக் கடத்தி மதுகிரியில் உள்ள கொல்லஹள்ளி, தாவங்கரே, மண்டியா உள்ளிட்ட பல இடங்களில் விற்றுள்ளனர் என்பது தெரிய வந்தது.

தற்போது 9 குழந்தைகளில் 4 குழந்தைகள் மீட்கப்பட்டு தத்தெடுப்பு மையத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களின் பெற்றோர் யார் என்பது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். குழந்தை கடத்தல் நடைபெற்ற தொகுதியின் அமைச்சராக கர்நாடகாவைச் சேர்ந்த உள்துறை அமைச்சர் ஜி. பரமேஸ்வரா உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்தில், கர்நாடகா மாநிலத்தில் பெல்காம் மாவட்டம் கிட்டூரில் குழந்தை கடத்தல் நெட்வொர்க் கண்டுபிடிக்கப்பட்டது. கிட்டூரைச் சேர்ந்த அப்துல் கஃபர் லடகான் என்ற போலி மருத்துவர் கருக்கலைப்பு செய்து பின்னர் குழந்தைகளை விற்பனை செய்து வந்தார்.

இதையறிந்த மாவட்ட சுகாதாரத் துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இதையடுத்து குற்றம் சாட்டப்பட்ட போலி மருத்துவர் அப்துல் கபார் லடாகான் உட்பட 5 பேரை போலீஸார் கைது செய்தனர். குழந்தை விற்பனை நெட்வொர்க், கருவைக் கொல்லும் கும்பல் ஆகியவை கர்நாடகா மாநிலத்தில் செயல்பட்டு வருவது பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்திள்ளது.

SCROLL FOR NEXT