உயிரிழந்த ஆயுதப்படை காவலர் வினோத்குமார் 
செய்திகள்

விடுமுறையில் வீட்டுக்கு வந்த காவலர் தூக்கிட்டு தற்கொலை!

கே.காமராஜ்

திண்டுக்கல் அருகே விடுமுறையில் வீட்டுக்கு வந்த காவலர், திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் கன்னிவாடி பகுதியைச் சேர்ந்தவர் ஓய்வு பெற்ற அரசு பேருந்து ஓட்டுநரான ஆறுமுகம். இவரது மகன் வினோத்குமார் (32). இவருக்கு திருமணமாகி 4 வயதில் ஆண் குழந்தை ஒன்று உள்ளது. வினோத்குமார் சென்னையில் ஆயுதப்படை காவலராக பணியாற்றி வருகிறார். கடந்த சில மாதங்களாகவே வினோத்குமார் கடுமையான மன உளைச்சலில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. பல்வேறு இடங்களிலும் வினோத்குமார் கடன் வாங்கி இருந்த நிலையில், அதனை கொடுத்தவர்கள் திருப்பி கேட்டு அவரை நெருக்கி வந்ததாக கூறப்படுகிறது.

திண்டுக்கல் அரசு மருத்துவமனை

இந்த நிலையில் இரண்டு நாள் விடுமுறைக்காக தனது சொந்த ஊரான கன்னிவாடிக்கு வினோத்குமார் வந்திருந்தார். நேற்று வீட்டில் தனியாக இருந்த வினோத்குமார், திடீரென தூக்கிட்டு தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளார். இதனைக் கண்ட உறவினர்கள் மற்றும் அக்கம் பக்கத்தினர் உடனடியாக அவரை மீட்டு கன்னிவாடி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றனர். ஆனால் வரும் வழியிலேயே அவர் உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதையடுத்து அவரது உடல் பிரேதப் பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதனிடையே இந்த சம்பவம் தொடர்பாக கன்னிவாடி போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கன்னிவாடி காவல் நிலையம்

கடன் பிரச்சினை காரணமாக வினோத்குமார் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது குடும்பஒ பிரச்சினை காரணமாக இந்த விபரீத முடிவை எடுத்தாரா? என்பது தொடர்பாக தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. மேலும் ஆன்லைனில் கடன் வாங்கி சூதாட்டத்தில் ஈடுபட்டாரா என்பது தொடர்பாகவும் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. இளம் காவலர் உயிரிழந்த சம்பவம் சக காவலர்கள் மற்றும் பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

தற்கொலை எந்த பிரச்சனைக்கும் தீர்வு அல்ல. தற்கொலை எண்ணங்களில் இருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற நல்வாழ்வுத்துறை ஹெல்ப்லைன் 104 மற்றும் சினேகா தற்கொலை தடுப்பு ஹெல்ப்லைன் 044-24640050 என்ற எண்களைத் தொடர்பு கொள்ளவும்.

SCROLL FOR NEXT