ஆந்திர முதலமைச்சராக பதவியேற்க உள்ள சந்திரபாபு நாயுடு 
செய்திகள்

ஆந்திராவில் கோலாகலம்... முதலமைச்சராக சந்திரபாபு நாயுடு இன்று பதவியேற்பு!

கவிதா குமார்

ஆந்திரா முதலமைச்சராக சந்திரபாபு நாயுடு இன்று பதவியேற்கிறார். இவ்விழாவில் பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, நடிகர் ரஜினிகாந்த் உள்பட பலர் பங்கேற்க உள்ளனர்.

ஆந்திராவில் மக்களவைத் தேர்தலுடன் சட்டப்பேரவைக்கும் தேர்தல் நடைபெற்றது. இதில் முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி தனித்து போட்டியிட்ட நிலையில், தேசிய ஜனநாயக கூட்டணியின் கீழ் முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம், நடிகர் பவன் கல்யாணின் ஜன சேனா மற்றும் பாஜக ஆகிய கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிட்டன.

சந்திரபாபு நாயுடு

கடந்த 4-ம் தேதி தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில் தேசிய ஜனநாயக கூட்டணி மொத்தமுள்ள 175 இடங்களில் 164 இடங்களைக் கைப்பற்றியது. அதிகபட்சமாக சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சி 135 இடங்களில் வெற்றி பெற்றது.

இந்த நிலையில் தேசிய ஜனநாயக கூட்டணியின் எம்எம்ஏக்கள் கூட்டம் விஜயவாடாவில் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தேசிய ஜனநாயக கூட்டணியின் சட்டப்பேரவை கட்சித் தலைவராக (முதலமைச்சராக) சந்திரபாபு நாயுடுவை பவன் கல்யாண் முன்மொழிந்தார். பாஜக மாநில தலைவர் புரந்தேஸ்வரி இதனை வழிமொழிந்தார். இதை அனைத்து எம்எல்ஏக்களும் ஏற்றுக்கொண்டதால் சட்டப்பேரவை கட்சி தலைவராக சந்திரபாபு நாயுடு ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார்.

கூட்டணி கட்சிகளின் சார்பில் சந்திரபாபு நாயுடு தலைவராக ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டதற்கான கடிதத்தையும், ஆந்திர ஆளுநர் நசீர் அகமதிடம் பாஜக மாநில தலைவர் புரந்தேஸ்வரி, மற்றும் தெலுங்குதேசம், ஜனசேனா கட்சி பிரதிநிதிகள் கொண்டு போய் கொடுத்தனர். சந்திரபாபு நாயுடுவை ஆட்சி அமைக்க வரும்படி அழைப்பு விடுக்கும்படி இவர்கள் ஆளுநரிடம் கோரிக்கை விடுத்தனர்.

இதனையடுத்து ஆந்திர முதலமைச்சராக சந்திரபாபு நாயுடு இன்று பதவியேற்க உள்ளார். இந்த விழாவுக்காக, விஜயவாடா விமான நிலையம் அருகே உள்ள கேசரபல்லி என்ற இடத்தில் பிரம்மாண்டமான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இங்கு இன்று காலை 11.27 மணிக்கு சந்திரபாபு நாயுடு முதல்வராக பதவி பிரமாணம் செய்ய உள்ளார்.

உள்துறை அமைச்சர் அமித் ஷா, பிரதமர் மோடி

மேலும் இவருடன் ஜனசேனா கட்சி தலைவர் பவன் கல்யாண், நடிகர் பாலகிருஷ்ணா, மகன் லோகேஷ் உட்பட பலர் அமைச்சர்களாக பதவி ஏற்க உள்ளனர். இதில் பவன் கல்யாணுக்கு துணை முதலமைச்சர் பதவி வழங்கப்படுமென எதிர்பார்க்கப்படுகிறது.

இவ்விழாவிற்கு சிறப்பு விருந்தினராக பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் உட்பட மத்திய அமைச்சர்கள், தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி, நடிகர்கள் ரஜினி காந்த், சிரஞ்சீவி மற்றும் பல அரசியல், சினிமா பிரமுகர்கள் கலந்து கொள்கின்றனர்

SCROLL FOR NEXT