ஆழ்கடலில் மாயமான மீனவர் அந்தோணி மற்றும் உயிரிழந்த வேதேஸ்வரன் 
செய்திகள்

ஆழ்கடலில் மீனவர் மாயம்... குடும்பத்தினரின் நிலை குறித்து வருந்திய மைத்துனர் தற்கொலை

கே.காமராஜ்

தஞ்சாவூரில் கடலுக்கு மீன் பிடிக்க சென்ற மீனவர் கடலில் மாயமான நிலையில், அவரது மைத்துனர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள மல்லிப்பட்டினம், நொண்டித்தோப்பு பகுதியைச் சேர்ந்த அந்தோணி, ஆரோக்கியம், பழனிசாமி, விஜயராகவன் ஆகிய 4 மீனவர்கள் கடந்த ஞாயிற்றுக்கிழமை நாட்டுப்படகில் மீன் பிடிக்க சென்றனர். ஆழ்கடலில் காற்று அதிகமாக இருந்ததால், திடீரென படகு கவிழ்ந்து விபத்திற்குள்ளானது. இதில் அந்தோணி கடலில் மூழ்கி மாயமானார். அவ்வழியாக வந்த சக மீனவர்கள் ஆரோக்கியம், பழனிசாமி மற்றும் விஜயராகவன் ஆகிய 3 பேரையும் மீட்டு கரைக்கு அழைத்து வந்தனர். பின்னர் அவர்கள் மூவரும் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கடலில் மூழ்கிய நாட்டுப்படகு... ஆழ்கடலில் தவித்த மீனவர்கள்

இதையடுத்து கடந்த 5 நாட்களாக மாயமான மீனவர் அந்தோணியை மீனவர்களும், கடலோரக் காவல் படையினரும் தொடர்ந்து தேடி வந்த போதும், இதுவரை அவர் கிடைக்கவில்லை. அந்தோணிக்கு, மனைவி மற்றும் 3 குழந்தைகள் உள்ளனர். அந்தோணியின் மைத்துனரான வேதேஸ்வரன் (28) என்பவர், கடந்த 5 நாட்களாக தனது சகோதரி மற்றும் அவரது குழந்தைகளின் நிலை குறித்து கவலை அடைந்து கடும் மன உளைச்சலில் இருந்து வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று இரவு வீட்டில் தனியாக இருந்த அவர், திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

மூழ்கிய படகை மீட்கும் முயற்சியில் சக மீனவர்கள்

தகவல் அறிந்து அங்கு சென்ற போலீஸார் வேதேஸ்வரனின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக பேராவூரணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த நிலையில் மாயமான அந்தோணியை கண்டுபிடித்துத் தர வேண்டுமென, அவரது மனைவி மற்றும் உறவினர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். மீனவர் மாயமானதைத் தொடர்ந்து அவரது மைத்துனர் தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் நொண்டித்தோப்பு பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

SCROLL FOR NEXT