மக்களவை இடைக்கால சபாநாயகராக பர்த்ருஹரி மஹ்தாப் பதவியேற்பு 
செய்திகள்

மக்களவை இடைக்கால சபாநாயகராக பர்த்ருஹரி மஹ்தாப் பதவியேற்பு!

வ.வைரப்பெருமாள்

மக்களவை இடைக்கால சபாநாயகரா பாஜகவைச் சேர்ந்த பர்த்ருஹரி மகதாப் இன்று பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

மக்களவைத் தேர்தல் நடைபெற்று முடிந்து, மத்தியில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி மீண்டும் ஆட்சி பொறுப்பேற்றுள்ளது.

இந்நிலையில் 18வது மக்களவையின் முதல் கூட்டத்தொடர் இன்று தொடங்குகிறது. வரும் 26ம் தேதி மக்களவைத் தலைவர் தேர்தல் நடைபெற உள்ளது. அதற்கு முன்பாக மக்களவை இடைக்காலத் தலைவராக பாஜகவின் பர்த்ருஹரி மஹ்தாப் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

குடியரசுத் தலைவர் மாளிகையில், குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, அவருக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

இன்று தொடங்கும் மக்களவை கூட்டத் தொடருக்கு பர்த்ருஹரி மஹ்தாப் தலைமை வகிக்க உள்ளார். மேலும் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட எம்பி-க்கள் இடைக்கால சபாநாயகர் பர்த்ருஹரி மஹ்தாப் முன்னிலையில் பதவியேற்க உள்ளனர்.

மஹ்தாப் நியமனமானது எதிர்க்கட்சிகளிடமிருந்து, குறிப்பாக காங்கிரஸிடமிருந்து விமர்சனத்தை பெற்றுள்ளது. மக்களவையில் 8 முறை பதவி வகித்த அக்கட்சியைச் சேர்ந்த கொடிக்குன்னில் சுரேஷை நியமிக்காமல் மத்திய அரசு புறக்கணித்துள்ளதாக காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது.

பர்த்ருஹரி மஹ்தாப்

காங்கிரஸின் இந்த குற்றச்சாட்டை நிராகரித்த நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜுஜு, “ கொடிக்குன்னில் சுரேஷ் 8 முறை எம்பி-யாக இருந்தபோதிலும் அவர் தொடர்ந்து மக்களவைக்கு தேர்வாகவில்லை. ஆனால் பர்த்ருஹரி மஹ்தாப் தொடர்ந்து 7 முறை மக்களவைக்கு தேர்வாகியுள்ளார்" என்றார்.

ஒடிசா மாநிலம், கட்டாக் தொகுதி எம்பி-யான பர்த்ருஹரி மஹ்தாப், மக்களவைத் தேர்தலுக்கு முன்பு பிஜு ஜனதா தளம் கட்சியிலிருந்து பாஜகவில் இணைந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT