நயினார் நாகேந்திரன்  
செய்திகள்

ரூ.4 கோடி பறிமுதல் வழக்கு... சிபிசிஐடி முன்பு நயினார் நாகேந்திரன் ஆஜராகவில்லை!

கே.காமராஜ்

தாம்பரம் ரயில் நிலையத்தில் 4 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்ட வழக்கில் நேரில் ஆஜராகுமாறு சிபிசிஐடி போலீஸார் சம்மன் அனுப்பி இருந்த நிலையில், நயினார் நாகேந்திரன், கேசவ விநாயகம் ஆகியோர் இன்று நேரில் ஆஜராகவில்லை.

கடந்த ஏப்ரல் 6ம் தேதி தாம்பரம் ரயில் நிலையத்தில் தேர்தல் பறக்கும் படையினர் அதிரடியாக சோதனை நடத்தினர். அப்போது ரயில் மூலம் நெல்லைக்கு கடத்தப்பட இருந்த 3.99 கோடி ரூபாய் ரொக்கப் பணத்தை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக 3 பேரை கைது செய்து விசாரணை நடத்திய போது, இந்த பணத்தை நெல்லை தொகுதியின் பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்காக எடுத்துச் செல்வதாக அவர்கள் தெரிவித்தனர். இதையடுத்து இந்த வழக்கு சிபிசிஐடி போலீஸாரிடம் ஒப்படைக்கப்பட்டது.

சிபிசிஐடி போலீஸார்

இந்த பணம் தனக்கு சொந்தமானது அல்ல என நயினார் நாகேந்திரன் தெரிவித்திருந்த நிலையில், இந்த பணம் பாஜக கட்சிக்கு சொந்தமானது என தகவல் பரவியது.

இந்நிலையில் சிபிசிஐடி போலீஸார் இந்த வழக்கு தொடர்பாக பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன், பாஜக அமைப்பு செயலாளர் கேசவ விநாயகம், பாஜக மாநில பொருளாளர் எஸ்.ஆர்.சேகர் உள்ளிட்டோரை விசாரணைக்கு நேரில் ஆஜராகுமாறு சம்மன் அனுப்பி இருந்தனர். இந்த வழக்கு தொடர்பான விசாரணையை ரத்து செய்யக் கோரி பாஜக தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

தாம்பரம் ரயில் நிலையத்தில் பணத்துடன் பிடிபட்ட நபர்கள்.

இதையடுத்து இன்று நயினார் நாகேந்திரன், கேசவ விநாயகம் உள்ளிட்ட 4 பேர், சிபிசிஐடி அலுவலகத்தில் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. இந்நிலையில் இன்று அவர்கள் யாரும் ஆஜராகவில்லை என சிபிசிஐடி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜூன் 4ம் தேதிக்கு பிறகு ஆஜராவதாக அதிகாரிகளிடம் நால்வரும் தெரிவித்துள்ளதாக சிபிசிஐடி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நயினார் நாகேந்திரன், பாஜக அமைப்பு செயலாளர் கேசவ விநாயகம், பாஜக தொழில் பிரிவுத் தலைவர் கோவர்தன், நயினார் நாகேந்திரனின் உதவியாளர் மணிகண்டன் உள்ளிட்ட 4 பேருக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT