அதிஷி உடன் அர்விந்த் கேஜ்ரிவால் 
செய்திகள்

மோடி மீண்டும் பிரதமரானால் எதிர்க்கட்சித் தலைவர்கள் எல்லோரும் சிறையில் இருப்பார்கள்... அர்விந்த் கேஜ்ரிவால் ஆருடம்

எஸ்.எஸ்.லெனின்

மோடி மீண்டும் பிரதமரானால் எதிர்க்கட்சித் தலைவர்கள் அனைவரும் சிறையில் அடைக்கப்படுவார்கள் என அர்விந்த் கேஜ்ரிவால் ஆருடம் தெரிவித்திருக்கிறார்.

ஆம் ஆத்மி கட்சியின் தலைவர்கள் மற்றும் டெல்லி அமைச்சர்கள் அடுத்தடுத்து கைது செய்யப்படுவதன் வரிசையில், விரைவில் அதிஷி கைது செய்யப்பட இருக்கிறார் என்று அர்விந்த் கேஜ்ரிவால் தெரிவித்துள்ளார். அவதூறு வழக்கில் அமைச்சர் அதிஷிக்கு நீதிமன்றம் சம்மன் அனுப்பியது தொடர்பாக பதிலளித்த ஆம் ஆத்மி கட்சித் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால், ’அடுத்த கைது அதிஷிதான்’ என்று கூறினார்.

டெல்லி அமைச்சர் அதிஷி

மேலும் இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் பதிவிட்ட அர்விந்த் கேஜ்ரிவால், ’நரேந்திர மோடி மீண்டும் பிரதமரானால், அனைத்து எதிர்க்கட்சித் தலைவர்களும் சிறையில் அடைக்கப்படுவார்கள்’ என்று ஆருடம் கூறினார். டெல்லி கலால் கொள்கை வழக்கில் கைதாகி இடைக்கால ஜாமீனில் விடுவிக்கப்பட்டிருக்கும் அர்விந்த் கேஜ்ரிவால், ஜூன் 2 உடன் அந்த ஜாமீன் காலாவதியாகும் நிலையில் இவ்வாறு அறிவித்துள்ளார். மேலும் ஆம் ஆத்மி தலைவர்கள் அனைவரையும் அற்பமான மற்றும் பொய்யான வழக்குகளில் கைது செய்ய மத்திய அமைப்புகள் முயற்சித்து வருவதாகவும் கூறினார்.

"அடுத்து அதிஷியை கைது செய்வார்கள் என்று நான் முன்பே கூறியிருந்தேன். முழு சர்வாதிகாரத்தின் கீழ் இப்போது அது நடக்க இருக்கிறது. ஆம் ஆத்மி கட்சியின் அனைத்துத் தலைவர்களையும் ஒவ்வொருவராக கைது செய்கிறார்கள். இதே போன்று எதிர்க்கட்சித் தலைவர்கள் ஒவ்வொருவரும் கைது செய்யப்படுவார்கள். மோடி மீண்டும் ஆட்சிக்கு வந்தால், நமது அன்பான நாட்டை சர்வாதிகாரத்தில் இருந்து காப்பாற்றுவது இயலாது போய்விடும்” என்று அர்விந்த் கேஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால்

பாஜக செய்தித் தொடர்பாளர் பிரவீன் ஷங்கர் கபூர் தாக்கல் செய்த அவதூறு வழக்கு தொடர்பாக, டெல்லி நீதிமன்றம் அதிஷிக்கு சம்மன் அனுப்பியது. ’பாஜகவில் சேர்வது அல்லது அல்லது அமலாக்க இயக்குநரகத்தை எதிர்கொள்வது.. என தனக்கு அழுத்தம் தரப்பப்பட்டதாக’ அதிஷி கூறியது தொடர்பாக அவருக்கு அவதூறு நோட்டீஸ் வந்துள்ளது.

"ஆம் ஆத்மி கட்சி மீண்டும் மீண்டும் பாஜகவுக்கு எதிராக அவதூறான அறிக்கைகளை பொறுப்பின்றி வெளியிடுகிறது. எனவே அதிஷி இப்போது தனது தரப்பை முன்வைக்க நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும்" என்று பன்சூரி ஸ்வராஜ் கூறியிருந்தார். இதையொட்டியே அடுத்த கைது அதிஷி என கேஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

இதையும் வாசிக்கலாமே...

எடியூரப்பா மீது போக்சோ புகார் அளித்த பெண் திடீர் மரணம்... கர்நாடகாவில் பரபரப்பு!

திண்டுக்கல் ஆட்சியர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை... கட்டுக் கட்டாக பணம் பறிமுதல்!

டெல்லியில் இண்டிகோ விமானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்: பயணிகள் அவசர அவசரமாக வெளியேற்றம்

தாய்லாந்தில் திருமணம்... சென்னையில் ரிசப்ஷன்... நடிகை வரலட்சுமியின் அடடே பிளான்!

மே 30-ம் தேதி கன்னியாகுமரி வருகிறார் பிரதமர் மோடி... பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்!

SCROLL FOR NEXT