அண்ணாமலை 
செய்திகள்

’நான் மத்திய அமைச்சராகவில்லை...’ அண்ணாமலை அறிவிப்பு; பாஜகவினர் அதிர்ச்சி

காமதேனு

பாஜக மாநிலத் தலைவரான அண்ணாமலை ’தான் மத்திய அமைச்சராகவில்லை’ என விளக்கம் தந்துள்ளார்.

நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் பாஜக பெரிதும் எதிர்பார்த்த தனிப்பெரும்பான்மை தட்டிப்போனது. ஆனபோதும் கூட்டணிக்கட்சிகளின் உதவியால் தனது தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசை அமைக்கிறது.

தமிழகத்தில் மோடி ரோடு ஷோ; உடன் அண்ணாமலை உள்ளிட்டோர்

எதிர்க்கட்சிகளின் ’இந்தியா கூட்டணி’ கைகோர்ப்புக்கு மத்தியில், வட மாநிலங்களில் பரவலான வெற்றியை பதிவு செய்ததோடு தென்னகத்திலும் கணிசமான வெற்றியை பாஜக பெற்றிருந்தது. இடதுசாரிகள் ஆட்சியிலான கேரளத்தில் கூட முதல் முறையாக இந்த மக்களவைத் தேர்தலில் தாமரை மலர்ந்திருந்தது.

ஆனால் ஓரிரு இடங்களிலேனும் வெற்றி பெறும் என எதிர்பார்க்கப்பட்ட தமிழகத்தில் பாஜக படுதோல்வியடைந்துள்ளது. பிரதமர் மோடி முதல் அடித்தள தொண்டர்கள் வரை பெரும் எதிர்பார்ப்புடன் தீவிர பிரச்சாரப் பணிகளில் ஈடுபட்ட போதும், பல தொகுதிகளில் பாஜக டெபாசிட் இழந்தது. அக்கட்சியின் சட்டமன்ற வேட்பாளர்களின் தொகுதிகளில் கூட பாஜகவுக்கான வாக்குகள் தேறவில்லை.

தேர்தல் முடிவுகளை அடுத்து மாநிலத் தலைவர் அண்ணாமலைக்கு எதிரான அதிருப்தி கட்சியில் அதிகரித்தது. அண்ணாமலையில் துடுக்குப் பேச்சு மற்றும் விமர்சனங்களால் அதிமுகவுடன் கூட்டணி முறிந்ததாக இரு கட்சிகளின் இரண்டாம் கட்டத் தலைவர்கள் குறைகூறி வருகின்றனர்.

இதனையடுத்து மாநிலத் தலைவர் பொறுப்பிலிருந்து அண்ணாமலை மாற்றப்படுவார் என்றும், அவர் மோடி 3.0 அமைச்சரவையில் சேருவார் என்றும் ஆரூடங்கள் கொடி கட்டிப் பறந்தன. அதற்கேற்ப தமிழிசை சௌந்திரராஜன் உள்ளிட்ட முன்னாள் தலைவர்கள், பாஜகவினரின் அதிருப்தியை வெளிப்படையாகவும் பதிவு செய்து வருகின்றனர்.

அண்ணாமலை

இதற்கிடையே புதிய மோடி அமைச்சரவையில் அண்ணாமலை இடம்பெறப் போவதில்லை எனத் தெரிய வருகிறது. மோடி இல்லத்தில் நடைபெறும் தேநீர் விருந்தில் எல்.முருகன் போன்றோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருப்பதன் மத்தியில், அண்ணாமலை அழைக்கப்படவில்லை. செய்தியாளர்களின் கணிப்பை உறுதி செய்யும் வகையில், அண்ணாமலை அளித்த பதில் ஒன்றில் ’தான் மத்திய அமைச்சராகவில்லை என்றும், பாஜக தமிழகத் தலைவராக அரசியல் பணியை தொடரப் போவதாகவும்’ தெரிவித்துள்ளார்.

இது தமிழகத்தின் பாஜகவினருக்கு பலவகையிலும் அதிர்ச்சி தந்துள்ளது. அண்ணாமலை மத்திய அமைச்சராவார் என்று எதிர்பார்த்திருந்த அவரது ஆதரவாளர் ஒரு வகையிலான அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர். அண்ணாமலை மாநிலத் தலைவர் பொறுப்பிலிருந்து அகற்றப்பட்டால், அதிமுகவுடனான இணக்கம் உட்பட, எதிர்வரும் சட்டப்பேரவைக்கான சாதகங்கள் பல பாஜகவுக்கு கிடைக்கும் என்று எதிர்பார்த்திருந்த, அண்ணாமலை அதிருப்தியாளார்களும் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

SCROLL FOR NEXT