கதறியழும் குடும்பங்கள் 
செய்திகள்

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விற்பனையில் திமுகவினருக்கு தொடர்பு... அமித் ஷாவுக்கு அண்ணாமலை பரபரப்பு கடிதம்!

கவிதா குமார்

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணம் குறித்து சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கடிதம் எழுதியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள கருணாபுரத்தில் விஷச்சாராயம் குடித்து 50 பேர் உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் 30 பேர் கவலைக்கிடமாக உள்ளதாக மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் கூறியுள்ளது கவலையை ஏற்படுத்தியுள்ளது.

மருத்துவமனை முன்பு கூடியுள்ள மக்கள்.

இந்த நிலையில், இந்தச்சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் உயிர் இழந்தவர்களின் குடும்பத்தினரை தமிழக பாஜக. மாநில தலைவர் அண்ணாமலை நேற்று சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். அத்துடன் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ஒரு லட்சம் ரூபாய் பாஜக சார்பில் வழங்கப்படும் என்று தெரிவித்தார்.

இந்த நிலையில் கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணங்கள் குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வுக்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இன்று கடிதம் எழுதியுள்ளார்.

அதில், “கள்ளக்குறிச்சியில் விஷசாராயம் குடித்து 39 பேர் உயிரிழந்திருக்கிறார்கள் 90-க்கும் மேற்பட்டோர் பல்வேறு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது. கடந்த ஆண்டு மே மாதம் விழுப்புரம் மாவட்டம் மற்றும் செங்கல்பட்டு மரக்காணத்தில் இதே போன்ற சம்பவம் ஏற்பட்டு 23 பேர் உயிரிழந்திருக்கிறார்கள் என்பதையும் இதன் மூலம் தெரிவித்துக் கொள்கிறேன்.

திமுக. அரசின் திறமையற்ற ஆட்சியால் கடந்த இரண்டு ஆண்டுகளில் தமிழகம் 60-க்கும் மேற்பட்ட உயிர்களை இழந்திருக்கிறது. தமிழகத்தில் கள்ளச்சாராயம் உற்பத்தி மற்றும் விற்பனை என்பது தொடர்ந்து நடைபெற்று வருகிறது. திமுகவைச்சேர்ந்தவர்களுக்கும் இதில் தொடர்பு உள்ளது என தகவல் தெரிய வந்துள்ளது.

காவல் துறையினருக்கு தெரிந்தே இந்த விற்பனை சட்டவிரோதமாக நடைபெற்று வருகிறது. எனவே, மாநில அரசு இந்த சம்பவத்தை விசாரித்தால் முழுமையான தகவல் தெரியவராது. இதனால் மத்திய அரசு தலையிட்டு சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட கேட்டுக்கொள்கிறேன்” என்று கூறப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT