சட்டப் பேரவைக்கு கருப்புச் சட்டையில் வந்த எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அதிமுகவினர் 
செய்திகள்

சட்டப் பேரவைக்கு கருப்புச் சட்டையில் வந்த அதிமுக, பாமக எம்எல்ஏ-க்கள்; கள்ளச்சாராய விவகாரத்தை எழுப்பி கடும் அமளி

வ.வைரப்பெருமாள்

தமிழக சட்டப் பேரவை கூட்டத் தொடரில் கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விவகாரத்தை எழுப்பி அமளியில் ஈடுபட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள் குண்டுக்கட்டாக வெளியேற்றப்பட்டனர்.

கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் அருந்தி சுமார் 50 பேர் வரை உயிரிழந்துள்ளனர். மருத்துவமனைகளில் மேலும் நூற்றுக்கும் மேற்பட்டோர் கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கடந்த 2 நாள்களாக தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியையும், துயரத்தையும் இந்த சம்பவம் ஏற்படுத்தியுள்ளது.

கொத்துக் கொத்தாக உயிரிழப்பு நேரிட்ட பிறகு, அதிகாரிகள் மாற்றம், போலீஸார் பணியிடை நீக்கம், சிபிசிஐடி விசாரணை, உயிரிழந்தவர்கள் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் நிவாரணம் என, திமுக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

சபாநாயகர் அப்பாவு

இந்நிலையில் சட்டப் பேரவை கூட்டத்தொடர் தொடங்கியுள்ள நிலையில், இன்று பேரவைக்கு அதிமுக மற்றும் பாமக எம்எல்ஏ-க்கள், கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய சாவுகளை கண்டித்து கருப்புச் சட்டை அணிந்து வந்தனர்.

பேரவைக் கூட்டம் தொடங்கியதுமே, அதிமுக எம்எல்ஏ-க்கள் எழுந்து கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணங்களுக்கு அரசு பொறுப்பேற்க வேண்டும் என கோஷங்களை எழுப்பினர். மேலும், மானிய கோரிக்கையை தவிர்த்துவிட்டு, முதலில் கள்ளக்குறிச்சி விவகாரத்தை விவாதிக்க வேண்டும் என சபாநாயகர் அப்பாவுவிடம் என கூறி கடும் அமளியில் ஈடுபட்டனர்.

குண்டுக்கட்டாக வெளியேற்றப்பட்ட அதிமுக எம்எல்ஏ ஆர்.பி.உதயகுமார்

அமளியில் ஈடுபடாமல் இருக்குமாறு அவர்களிடம் சபாநாயகர் அறிவுறுத்தினர். இருப்பினும் சபாநாயகரை முற்றுகையிட்டு, முதல்வர் மு.க.ஸ்டாலின் பதவி விலக வேண்டும் என்ற வாசகங்கள் உள்ள காகிதங்களை காண்பித்து தொடர்ந்து அமளியில் ஈடுபட்டனர். அதைத் தொடர்ந்து அதிமுக எம்எல்ஏ-க்களை வெளியேற்றுமாறு அவைக் காவலர்களுக்கு சபாநாயகர் உத்தரவிட்டார். இதையடுத்து அதிமுக எம்எல்ஏ-க்கள் அனைவரும் குண்டுக்கட்டாக சபையிலிருந்து வெளியேற்றப்பட்டனர். இதன் காரணமாக சட்டப் பேரவை வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

SCROLL FOR NEXT