செய்திகள்

குட் நியூஸ்... விண்ணப்பிக்காதவர்களுக்கு வாய்ப்பு... கல்லூரியில் சேர கால அவகாசம் நீட்டிப்பு!

காமதேனு

தமிழ்நாடு அரசு கலைக்கல்லூரிகளில் முதுநிலை படிப்புகளுக்கு சேர்வதற்கு விண்ணப்பிப்பதற்கான அவகாசம் செப்டம்பர் 1 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. 

தமிழ்நாட்டில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 2023-24ம் ஆண்டிற்கான முதுநிலை பட்டப் படிப்புகளில் முதலாமாண்டு மாணாக்கர் சேர்க்கை கடந்த 14 ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. www.tngasa.in  மற்றும்  www.tngasa.org  என்ற இணையதளங்கள் வாயிலாக விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டு அதன் வழியாக மாணவர்கள் விண்ணப்பித்து வருகிறார்கள்.

இந்நிலையில் சென்னை பல்கலைக்கழக இளநிலை பாடப்பிரிவிற்கான தேர்வு முடிவுகள் இன்னும் வெளியிடப்படவில்லை. அதனால் முதுநிலை பட்டப்படிப்பிற்கான மாணாக்கர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் செப்டம்பர் 1 வரை நீட்டிக்கப்படுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் உள்ள 164 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 2023-24ம் ஆண்டிற்கான இளநிலை பாடப்பிரிவுகளில் மாணாக்கர் சேர்க்கை முடிவுற்ற நிலையில், மேலும் சில அரசு கல்லூரிகளில் முழுமையாக நிரப்பப்படாமல் காலியாக உள்ள சில பாடப்பிரிவுகளுக்கு, நேரடி மாணாக்கர் சேர்க்கை, அதுசார்ந்த கல்லூரிகளில் ஆகஸ்ட் 21 முதல் நடைபெற உள்ளது. இந்த வாய்ப்பை மாணவர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.

நிரப்பப்படாமல் காலியாக உள்ள கல்லூரி வாரியான பாடப்பிரிவுகளின் விபரங்களை மாணாக்கர்கள்  www.tngasa.in “TNGASA 2023-UG VACANCY”- என்ற தொகுப்பில் காணலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT