உண்ணாவிரதப் போராட்டத்தில் அதிஷி 
செய்திகள்

அமைச்சர் அதிஷி ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதி... 5வது நாளில் அவரது உண்ணாவிரதம் முடிவுக்கு வந்தது

எஸ்.எஸ்.லெனின்

டெல்லி ஆம் ஆத்மி அமைச்சர் அதிஷி, உடலின் சர்க்கரையளவு ஆபத்தான வகையில் குறைந்ததால் அவர் மருத்துவமனை ஐசியூ பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளார். இதனால், அவரது உண்ணாவிரதப் போராட்டம் முடிவு கண்டுள்ளது.

டெல்லியில் தலைவிரித்தாடும் தண்ணீர் பிரச்சினையை முடிவுக்கு கொண்டுவர, பாஜக ஆளும் ஹரியாணா மாநிலத்திலிருந்து தேசத்தின் தலைநகருக்கு தண்ணீர் கோரி டெல்லியை ஆளும் ஆம் ஆத்மி அரசு வலியுறுத்தி வந்தது. அதே கோரிக்கையுடன் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஆம் ஆத்மி அமைச்சர் அதிஷி குதித்தார். ஆனால் அவரது உடல்நிலை ஆபத்தான நிலையை எட்டியதை அடுத்து இன்று காலை அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மேலும் அவரது உண்ணாவிரதப் போராட்டம் 5வது நாளில் முடிவு கண்டுள்ளது.

டெல்லி ஆம் ஆத்மி அரசின் நீர்வளத்துறை அமைச்சராக இருப்பவர் அதிஷி. டெல்லியின் வறட்சி மற்றும் கடும் தண்ணீர் பஞ்சம் காரணமாக ஹரியணாவில் இருந்து நீர் கோரி ஆளும் ஆம் ஆத்மி அரசு, ஹரியாணா மாநில அரசு மற்றும் மத்திய அரசு ஆகியவற்றை வலியுறுத்தி வந்தது. இதனிடையே டெல்லியின் தண்ணீர் தட்டுப்பாடு உச்சம் பெற்றதை அடுத்து, அண்டை மாநிலமான ஹரியாணாவிடம் டெல்லி நீர் கோரியிருந்தது. அதனை வலியுறுத்தி ஜூன் 21 அன்று அதிஷி உண்ணாவிரதப் போராட்டத்தில் இறங்கினார்.

தனது கோரிக்கையை வலியுறுத்தி நேற்று வீடியோ வெளியிட்டிருந்த அதிஷி, “டெல்லியின் 2.8 மில்லியன் மக்கள் ஒரு துளி தண்ணீருக்காக வேதனைப்படுகிறார்கள்" என்று கவலை தெரிவித்தார். மேலும் நலிவடையும் தனது உடல்நிலை குறித்து ஆதங்கம் தெரிவித்த அதிஷி, "எனது இரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரை அளவுகள் மோசமானதோடு, எடையும் குறைந்துள்ளது. கீட்டோன் அளவு மிக அதிகமாக உள்ளது. இது நீண்ட காலத்திற்கு தீங்கு விளைவிக்கும். எனினும் எத்தகைய சிரமம் வந்தாலும், ஹரியாணா தண்ணீரை விடுவிக்கும்வரை உண்ணாவிரதத்தை தொடர்வேன்" என்று பேசியிருந்தார்.

மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்படும் அதிஷி

ஆனால் நேற்றிரவு முதலே அவரது உடல் நிலை மோசமானது. இது தொடர்பாக ஆம் ஆத்மி வெளியிட்ட அறிக்கையில், அதிஷியின் உடல் எடை எதிர்பாரா விதமாக குறைந்து வருகிறது. ஜூன் 21 அன்று உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடும் முன் 65.8 கிலோவாக இருந்த அவரது உடல் எடை 4வது நாளான நேற்று 63.6 கிலோவாகக் குறைந்தது. மேலும் ரத்த சர்க்கரை அளவு 4 நாட்களில் 28 அலகுகள் குறைந்தன. இந்த நிலையில் நேற்று நள்ளிரவு 43 புள்ளிகளுக்கு குறைந்த சர்க்கரை அளவு, இன்று காலை 36 என்பதாக குறையவே, அவர் உடனடியாக மருத்துவமனையின் ஐசியூ பிரிவில் சேர்க்கப்பட்டார். இதன் மூலம் அவரது உண்ணாவிரதம் அதன் 5வது நாளில் முடிவுக்கு வந்துள்ளது.

SCROLL FOR NEXT