போராட்டம் நடத்திய மாணவிகள் 
செய்திகள்

தலைமை ஆசிரியைக்கு ஆதரவு... அரசுப் பள்ளி மாணவிகள் போராட்டம்!

காமதேனு

ஜோலார்பேட்டையில் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி  தலைமை ஆசிரியைக்கு ஆதரவாக மாணவிகள்  பள்ளியின் முன்பு அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. 

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் தாமதமாக வரும் மாணவிகளை தலைமை ஆசிரியை சாந்தி  திட்டியதாக கூறப்படுகிறது.  இதனால் ஆத்திரமடைந்த மாணவிகள் சிலர், தங்கள்  பெற்றோருடன் கடந்த ஒன்பதாம் தேதி பள்ளியில் முன்பு அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த தகவல் அறிந்து அங்கு வந்த ஜோலார்பேட்டை போலீஸார் மற்றும் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் முனி சுப்பராயன் ஆகியோர் பெற்றோர்களிடமும், தலைமை ஆசிரியையிடமும் விசாரணை மேற்கொண்டனர். அப்போது சில மாணவிகளும் அவர்களது பெற்றோர்களும் தலைமை ஆசிரியர் மீது புகார் கூறினர். இதை விசாரித்து நடவடிக்கை எடுப்பதாக முதன்மை கல்வி அலுவலர் அப்போது தெரிவித்தார்.

இந்நிலையில் நேற்று பள்ளியின் மேலாண்மை குழு கூட்டம் நடைபெற்றது.  மேலாண்மை குழு உறுப்பினர்களும், மாணவிகளின் பெற்றோரும் கலந்து கொண்டனர். அப்போது பெரும்பான்மையான மாணவிகள் தலைமை ஆசிரியருக்கு ஆதரவாக கருத்துக்கள் கூறினர். தலைமை ஆசிரியைக்கு எதிராக தவறான புகார் கொடுத்த மாணவிகளின் பெற்றோரை கண்டித்து திடீரென  பள்ளியின் முன் அமர்ந்து மாணவிகள்  போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் மாவட்ட முதன்மை முதன்மை கல்வி அலுவலர் முனி சுப்பராயன் மற்றும் ஜோலார்பேட்டை போலீஸார்  பள்ளிக்கு வந்து மாணவிகளை சமாதானப்படுத்தி அவர்களை வகுப்பறைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் தொடர்ந்து தலைமை ஆசிரியை சாந்தி மற்றும் மேலாண்மை குழு உறுப்பினர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

SCROLL FOR NEXT