செய்திகள்

சிதம்பரத்தில் பரபரப்பு... வீட்டின் தோட்டத்தில் புகுந்த முதலை!

காமதேனு

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே வீட்டின் தோட்டத்திற்குள் முதலை புகுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

சிதம்பரம் அருகே உள்ள கொள்ளிடம் ஆற்றில் ஏராளமான முதலைகள் உள்ளன. இந்த ஆற்றின் கிளை வாய்க்காலில் இருந்து, முதலைகள் ஊருக்குள் புகுந்து விடுவதும் வாடிக்கை. பின்னர் முதலைகளை வனத்துறையினர் பிடித்து நீர்த்தேக்கத்தில் விடுவர். அந்த வகையில் நேற்றும் ஒரு முதலை பிடிபட்டது.

இளநாங்கூர் கிராமத்தை சேர்ந்த காமராஜ் என்பவரின் வீட்டின் அருகே உள்ள தோட்டத்தில் நேற்று காலை முதலை ஒன்று கிடந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த காமராஜ், இது குறித்து வனத்துறைக்கு தகவல் தெரிவித்தார்.

இதையடுத்து சிதம்பரம் வனச்சரக அலுவலர் வசந்த் பாஸ்கர் தலைமையிலான பிரிவினர் விரைந்து சென்று நீண்ட போராட்டத்துக்கு பின்னர் முதலையை பிடித்தனர். 9 அடி நீளம், 140 கிலோ எடை கொண்ட அந்த முதலை வக்காரமாரி நீர்த்தேக்கத்தில் விடப்பட்டது.

SCROLL FOR NEXT