காட்டு யானை  
செய்திகள்

அதிர்ச்சி... காபி தோட்டத்திற்குள் புகுந்து தொழிலாளியை துரத்திய காட்டு யானை!

கவிதா குமார்

காபி தோட்டத்திற்குள் புகுந்து காட்டு யானை தாக்கியதில் விவசாயி ஒருவரின் கால் முறிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடகா மாநிலம், ஹசன் மாவட்டம் சகலேஷ்பூர் தாலுகாவில் உள்ள வத்தேஹல்லா கிராமத்தைச் சேர்ந்தவர் திவாகர் ஷெட்டி(60). காபி தோட்டத்தில் திவாகர் வேலை செய்து வந்தார். இந்த நிலையில் காபி தோட்டத்திற்கு அவர் இன்று வேலை சென்று கொண்டிருந்தார். அப்போது வனப்பகுதியில் இருந்து திடீரென வெளிவந்த காட்டுயானை திவாகரை துரத்தியது.

காட்டு யானை

இதனால் உயிருக்குப் பயந்து திவாகர் காபி தோட்டத்திற்குள் ஓடினார். ஆனால், அவரை விடாமல் காட்டுயானை துரத்தியது. ஒருகட்டத்தில் அந்த யானையிடமம் திவாகர் ஷெட்டி சிக்கிக் கொண்டார். அவரை காட்டுயானை தாக்கியது. இதில் அவரது கால் முறிந்தது. இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த வனத்துறை இடிஎஃப் குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.

திவாகர் ஷெட்டியைத் தாக்கிய காட்டு யானை காபி தோட்டம் வழியாகச் சென்று விட்டது. இதையடுத்து காயமடைந்த திவாகர் உடனடியாக தாலுகா மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து காபி தோட்ட தொழிலாளர்கள் கூறுகையில், " காட்டிற்குள் இருந்து வெளியேறும் யானைகள் காபி தோட்டங்களுக்குள் புகுந்து கொள்கின்றன. இதனால் காபி தோட்டத்திற்கு வேலை செல்லவே அச்சமாக உள்ளது.

இப்பகுதியில் நீண்ட நாளாக காட்டுயானைகளின் தொல்லை உள்ளது. அவை தாக்கி பலர் காயமடைந்துள்ளனர். ஆனாலும், இதுவரை இப்பிரச்சினைக்குத் தீர்வு ஏற்படவில்லை. காபி தோட்டங்களில் யானைகள் அத்துமீறி நுழைவதை வனத்துறை தடுத்து எங்களைக் காப்பாற்ற வேண்டும்" என்றனர்.

SCROLL FOR NEXT