பிரதமர் மோடி மற்றும் அமைச்சர்கள். 
செய்திகள்

பிரதமர் மோடியின் புதிய அமைச்சரவையில் 6 வழக்கறிஞர்கள்... 3 முன்னாள் முதலமைச்சர்கள்!

கவிதா குமார்

பிரதமர் நரேந்திர மோடியின் புதிய 72 உறுப்பினர்களைக் கொண்ட அமைச்சர்கள் குழுவில் பலதரப்பட்ட தொழில் வல்லுநர்கள் இடம் பிடித்துள்ளனர். 30 கேபினட் அமைச்சர்களில் ஆறு பேர் வழக்கறிஞர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவின் பிரதமராக மூன்றாவது முறையாக நரேந்திர மோடி நேற்று பொறுப்பேற்றுக் கொண்டார். தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் ஆதரவோடு அமைக்கப்பட்டுள்ள இந்த அமைச்சரவையில் முதுமை, இளமை மற்றும் அனுபவம் கொண்ட பலர் அமைச்சர்களாக பதவியேற்றுள்ளனர்.

மூன்றாவது முறையாக பிரதமராக பதவியேற்ற நரேந்திர மோடி

பிரதமர் மோடியின் 30 கேபினட் அமைச்சர்களில், ஆறு வழக்கறிஞர்கள், மூன்று எம்பிஏ பட்டதாரிகள் மற்றும் பத்து முதுகலை பட்டதாரிகள் உள்ளனர். இதில் பிரதமர் மோடியும், ராஜ்நாத் சிங்கும் முதுகலை பட்டம் பெற்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

அத்துடன் அமைச்சரவையில் நிதின் கட்கரி, ஜே.பி.நட்டா, பியூஷ் கோயல், சர்பானந்தா சோனோவால், பூபேந்தர் யாதவ் மற்றும் கிரண் ரிஜிஜு ஆகியோர் சட்டம் படித்துள்ளனர். ராஜ்நாத் சிங், சிவராஜ் சிங் சவுகான், நிர்மலா சீதாராமன், எஸ்.ஜெய்சங்கர், தர்மேந்திர பிரதான், டாக்டர் வீரேந்திர குமார், மன்சுக் மாண்ட்வியா, ஹர்தீப் சிங் பூரி, அன்னபூர்ணா தேவி மற்றும் கஜேந்திர சிங் ஷெகாவத் ஆகியோர் முதுகலை பட்டம் பெற்றுள்ளனர். மனோகர் லால், எச் டி குமாரசாமி, ஜிதன் ராம் மஞ்சி, ராஜீவ் ரஞ்சன் என்கிற லாலன் சிங், பிரகலாத் ஜோஷி மற்றும் கிரிராஜ் சிங் உட்பட ஆறு அமைச்சர்கள் பட்டதாரிகள் ஆவர்.

குறிப்பாக, மோடியின் புதிய அமைச்சரவையில் மூன்று முன்னாள் முதலமைச்சர்கள் இடம் பிடித்துள்ளனர்.அவர்கள் சிவராஜ் சிங் சவுகான் (மத்தியப் பிரதேசம்), மனோகர் லால் கட்டார் (ஹரியாணா), மற்றும் எச்.டி.குமாரசாமி (கர்நாடகா). புதிய அமைச்சரவையில் கேரளாவில் இருந்து முதல் முறையாக பாஜகவிற்கு வெற்றிக்கனியைப் பறித்துக் கொடுத்த நடிகர் சுரேஷ் கோபி இடம் பிடித்துள்ளார். மோடி பதவியேற்பு விழாவில் நடிகர்கள் ஷாருக்கான், ரஜினிகாந்த், பாடகர் கைலாஷ் கெர் மற்றும் தொழில் அதிபர்கள் முகேஷ் அம்பானி மற்றும் கௌதம் அதானி ஆகியோர் கலந்து கொண்டனர்.

நிகழ்வில் பங்கேற்ற திரை நட்சத்திரங்கள்

மேலும் தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட், முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், ஆன்மிகத் தலைவர் சுவாமி ராமபத்ராச்சார்யா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்த விழாவில் சுமார் 8,000 பேர் குடியரசு தலைவர் மாளிகை முன்பு கூடியிருந்தனர்.

SCROLL FOR NEXT