பயிற்சியில் மாவோயிஸ்டுகள் (கோப்பு படம்) 
செய்திகள்

தேர்தல் முடிந்த பின்னரும் தொடரும் என்கவுன்டர்... ஜார்க்கண்டில் 4 மாவோயிஸ்டுகள் சுட்டுக்கொலை

எஸ்.எஸ்.லெனின்

சத்தீஸ்கர் மற்றும் ஜார்கண்ட் மாநிலங்களில் மாவோயிஸ்டுகளுக்கு எதிரான தொடரும் வேட்டையில், தற்போது 4 மாவோயிஸ்டுகளை ஜார்க்கண்ட் போலீஸார் சுட்டுக்கொன்றுள்ளனர்.

மக்களவைத் தேர்தலை சீர்குலைக்கும் நோக்கில், ஜார்க்கண்ட், சத்தீஸ்கர் உள்ளிட்ட மாவோயிஸ்டுகள் நடமாட்டம் அதிகமுள்ள மாநிலங்களில், அவர்களுக்கு எதிரான நடவடிக்கைக்கைகள் முடுக்கி விடப்பட்டன. இதற்காக உள்ளூர் போலீஸாருடன், மாவோயிஸ்டுகளுக்கு எதிரான சிறப்பு படை மற்றும் தேர்தல் பணிக்கு முகாமிட்டிருக்கும் தேசத்தின் பல்வேறு பாதுகாப்பு படைகளும் களமிறக்கப்பட்டன. மாவோயிஸ்டுகளுக்கு அஞ்சி கிராம மக்கள் தேர்தல்களை தவிர்த்து வந்த சூழலை மாற்றும் நோக்கத்தில் இந்த பாதுகாப்பு படைகளின் கூட்டு நடவடிக்கைக்கு பலனும் கிடைத்தது.

மாவோயிஸ்டுகளுக்கு எதிரான தேடுதல் வேட்டை

இந்த வகையில் தேர்தலையொட்டி நடைபெற்ற மாவோயிஸ்டுகள் - பாதுகாப்பு படையினர் இடையிலான மோதலில் ஏராளமான நக்ஸலைட்டுகள் கொல்லப்பட்டனர். மாவோயிடுகளுக்கு எதிரான இந்த நடவடிக்கை, தேர்தல் முடிந்த பின்னரும் தொடர்ந்து வருகின்றனர். இதனால் பலியாகும் மாவோயிஸ்டுகளின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. இந்த வரிசையில் ஜார்க்கண்டின் மேற்கு சிங்பூம் மாவட்டத்தில் நடந்த என்கவுன்டரில் நான்கு மாவோயிஸ்டுகள் கொல்லப்பட்டதாக அதிகாரிகள் இன்று காலை தெரிவித்தனர். டோன்டோ - கோயில்கேரா பகுதியில் இந்த சம்பவம் நடந்துள்ளது.

"மாவோயிஸ்டுகளுடன் நீடித்த துப்பாக்கிச் சண்டையில் 4 பேர் கொல்லப்பட்டனர்; இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். என்கவுன்டர் நடந்த இடத்தில் இருந்து ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகளும் கைப்பற்றப்பட்டுள்ளன. தப்பியோடிய மாவோயிஸ்டுகளுக்கு எதிரான தேடுதல் நடவடிக்கை திங்களன்றும் தொடர்ந்து நடந்து வருகிறது" என்று ஜார்க்கண்ட் காவல்துறை செய்தித் தொடர்பாளர் அமோல் ஹோம்கர் கூறினார். பலியான நால்வரில் மாவோயிஸ்டுகள் முக்கிய தளபதி ஒருவரும் அடங்குவார் என மேற்கு சிங்பூம் காவல்துறை கண்காணிப்பாளர் அசுதோஷ் சேகர் தெரிவித்துள்ளார்.

மாவோயிஸ்டுகள்

சத்தீஸ்கரின் நாராயண்பூர் மாவட்டத்தில் நடந்த என்கவுன்டரில் 8 மாவோயிஸ்டுகள் மற்றும் சிறப்பு அதிரடிப்படையின் ஒரு ஜவான் கொல்லப்பட்டதன் இரு தினங்களுக்குப் பின்னர் இந்த சம்பவம் நடந்துள்ளது. என்கவுன்டரில் கொல்லப்பட்ட 8 மாவோயிஸ்டுகளில் 6 பேர் மூத்த வீரர்கள் என்றும், அவர்கள் தலைக்கு தலா 8 லட்சம் ரூபாய் வெகுமதி அறிவிக்கப்பட்டிருந்ததாகவும் போலீஸார் தெரிவித்துளானர். இவர்கள் அனைவரும் தடைசெய்யப்பட்ட ’மக்கள் விடுதலை கொரில்லா படை’ என்ற நக்ஸலைட்டுகள் குழுவை சேர்ந்தவர்கள் எனவும் தெரிய வந்திருக்கிறது.

SCROLL FOR NEXT