திருப்பூர் அருகே ரயில் மோதி 2 தொழிலாளர்கள் உயிரிழப்பு 
செய்திகள்

அதிகாலையில் சோகம்... தண்டவாளத்தை கடக்க முயன்ற 2 பேர் ரயில் மோதி உயிரிழப்பு!

கே.காமராஜ்

திருப்பூர் அருகே ரயில் தண்டவாளத்தை கடக்கு முயன்ற 2 தொழிலாளர்கள் ரயில் மோதியதில் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

திருப்பூர் மாவட்டம் காவிளிபாளையம் புதூர் பகுதியில் வீடு கட்டுமானப் பணி நடைபெற்று வருகிறது. இந்த பணியில் தொழிலாளர்கள் சிலர் ஈடுபட்டு வந்தனர். தினமும் காலையில் அப்பகுதியில் உள்ள ரயில் தண்டவாளத்தை கடந்து சென்று தேநீர் குடிப்பதை தொழிலாளர்கள் வழக்கமாக வைத்துள்ளனர்.

விபத்து நடந்த இடத்தில் போலீஸார் ஆய்வு

இன்று அதிகாலை 5 மணி அளவில், ராஜ்குமார் மற்றும் சரவணபவன் ஆகியோர் தேநீர் குடிப்பதற்காக டீக்கடை நோக்கி சென்றுள்ளனர். அதிகாலையில் பனிமூட்டம் அதிகமாக இருந்ததாக கூறப்படுகிறது. இரு தொழிலாளர்களும் ரயில் தண்டவாளத்தை கடந்த போது, அவ்வழியாக கோவை-சென்னை இடையான ரயில் திருப்பூர் நோக்கி சென்றுள்ளது. எதிர்பாராத விதமாக இந்த ரயில் இருவர் மீதும் அதிவேகத்தில் மோதியதில், இருவரும் தூக்கி வீசப்பட்டனர். இதில் படுகாயம் அடைந்த இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

தண்டவாளத்தை கடக்க முயன்ற போது ரயில் மோதி விபத்து

இது தொடர்பாக ரயிலின் ஓட்டுநர் அளித்த தகவலின் பேரில், ரயில்வே போலீஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இருவரது உடல்களையும் மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 2 தொழிலாளர்கள் ரயில் மோதி உயிரிழந்த சம்பவம், சக தொழிலாளர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

SCROLL FOR NEXT