தேசம்

கூச்சலிட்ட செவிலியர்; கஞ்சாவுடன் சிக்கிய ஆந்திர வாலிபர்: பரபரப்பான ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை!

காமதேனு

ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு கஞ்சாவுடன் வந்த ஆந்திர மாநிலத்தை சேர்ந்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அவரிடம் இருந்து 9 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு, பல்வேறு மாவட்டம் மற்றும் மாநிலங்களில் இருந்து தினமும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட நோயாளிகள் சிகிச்சைக்காக வருகின்றனர். இதனால் ராஜீவ்காந்தி மருத்துவமனை எப்போதும் மக்கள் கூட்டம் நிறைந்து காணப்படும். இதனால் அங்கு வரும் அனைவரையும் கண்காணிப்பது என்பது ஒரு சவாலான விஷம். இந்நிலையில் நேற்றிரவு ராஜீவ்காந்தி மருத்துவமனைக்கு சந்தேகத்திற்கிடமாக கையில் பையுடன் ஒருவர் வந்துள்ளார்.

அப்போது அங்கு பணியில் இருந்த செவிலியர் ஒருவர் அவரிடம் யாரை பார்க்க வேண்டும் என விசாரித்தபோது அந்த நபர் தெலுங்கில் முன்னுக்கு பின் முரணாக பதிலளித்து விட்டு திடீரென அங்கிருந்து ஓட்டம் பிடித்தார். உடனே செவிலியர் கூச்சலிட்டத்தை அடுத்து உஷாரான மருத்துவமனை காவலாளிகள் துரத்தி சென்று அந்த நபரை பிடித்து அவரிடம் இருந்த பையை சோதனை செய்த போது கஞ்சா இருந்தது தெரியவந்தது. இதனை கண்டு அதிர்ச்சியடைந்த ஊழியர் பின்னர் அந்த நபரை ராஜீவ் காந்தி மருத்துவமனை காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர்.

பிடிப்பட்டவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தை சேர்ந்த கண்ணமா ராயுடு(37) என்பதும், ஆந்திராவில் இருந்து 9 கிலோ கஞ்சாவை ரயில் மூலமாக கடத்தி வந்து சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு கொண்டு வந்ததும். அந்த கஞ்சாவை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் வைத்து வேறொரு நபருக்கு கைமாற்றி விடும் போது சிக்கியதும் விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து, கண்ணமா ராயுடுவை கைது செய்த காவல்துறையினர், அவரிடமிருந்த 9 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். மேலும் சென்னையில் கஞ்சாவை யாரிடம் விற்க வந்தார் என்பது குறித்தும் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். எப்போதும் பரபரப்பாக காணப்படும் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் கஞ்சா பிடிபட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

SCROLL FOR NEXT