காதலர் தினம் கொண்டாட ஆடு திருடியவர்கள் கைது
காதலர் தினம் கொண்டாட ஆடு திருடியவர்கள் கைது காதலர் தினம் கொண்டாட முடிவு செய்த இளைஞர்கள்; கைவிலங்கிட்ட போலீஸ்: நடந்தது என்ன?
தேசம்

காதலர் தினம் கொண்டாட முடிவு செய்த இளைஞர்கள்; கைவிலங்கிட்ட போலீஸ்: நடந்தது என்ன?

காமதேனு

காதலர் தினம் கொண்டாட பணம் இல்லாததால் ஆடு திருடிய இளைஞர்கள் இருவரை போலீஸார் கைது செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உலகம் முழுவதும் காதலர் தினம் இன்று கொண்டாடப்படுகிறது. காதலர்கள் தங்களது காதலை வெளிப்படுத்தவும், பரிசுப்பொருட்களை வாங்கிக் கொடுத்து சந்தோஷப்படுத்தவும் இந்த நாளை பயன்படுத்திக் கொள்கின்றனர். இப்படி காதலர் தினத்தைக் கொண்டாட முடிவு செய்த இரண்டு இளைஞர்கள் தற்போது காவல் துறை வசம் கம்பி எண்ணிக் கொண்டிருக்கிறார்கள்.

விழுப்புரம் மாவட்டம் கண்டாச்சிபுரம் அருகே மலையரசன் குப்பத்தைச் சேர்ந்த தம்பதியர், பட்டி அமைத்து ஆடுகளை வளர்த்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று இரவு பட்டியில் இருந்து திடீரென ஆடுகள் கத்த ஆரம்பித்துள்ளன. இதனால் சத்தம் கேட்டு எழுந்த தம்பதியர் வெளியே வந்து பார்த்தபோது இரண்டு இளைஞர்கள் பட்டியில் அடைக்கப்பட்டிருந்த ஆடுகளில் இருந்து ஒரு ஆட்டை திருடி டூவீலரில் கொண்டு செல்ல முயன்று கொண்டிருந்தனர். இதைப்பார்த்த அவர்கள், சத்தம் போடவும் அக்கம் பக்கத்தினர் திரண்டு அந்த இரண்டு இளைஞர்களையும் மடக்கிப் பிடித்தனர்.

இதன் பின் அவர்களை கண்டாச்சிபுரம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். அவர்களிடம் போலீஸார் நடத்திய விசாரணையில், செஞ்சி பீரங்கிமேடு பகுதியைச் சேர்ந்த மணிராம் மகன் அரவிந்தகுமார் (20), செஞ்சி கிருஷ்ணாபுரம் பகுதியைச் சேர்ந்த மதிவாணன் மகன் மோகன் (20) என்பதும் தெரியவந்தது. காதலர் தினத்தைக் கொண்டாட பணம் இல்லாததால், ஆடு திருடி விற்று அதில் வரும் பணத்தைக் கொண்டு காதலர் தினத்தைக் கொண்டாட இருந்தது போலீஸார் நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது. பின்னர் ஆடு திருடிய குற்றத்திற்காக இரண்டு பேரையும் கைது செய்த போலீஸார், அவர்கள் திருட்டிற்குப் பயன்படுத்திய டூவீலரையும் பறிமுதல் செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

SCROLL FOR NEXT