வீர மரணமடைந்த மேஜர் ஜெயந்த்
வீர மரணமடைந்த மேஜர் ஜெயந்த் 
தேசம்

மறைந்த மேஜர் ஜெயந்த் குடும்பத்தாருக்கு, பட்ஜெட்டில் உயர்த்தப்பட்ட கருணைத்தொகை சேருமா?

காமதேனு

தமிழக பட்ஜெட் அறிவிப்பின்படியாக உயர்த்தப்பட்ட கூடுதல் கருணைத்தொகை, அருணாச்சலில் வீரமரணம் அடைந்த தமிழகத்தை சேர்ந்த மேஜர் ஜெயந்த் குடும்பத்தாருக்கு கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

அருணாச்சல் பிரதேசம் மாநிலத்தில் அண்மையில் நேரிட்ட ராணுவ ஹெலிகாப்டர் விபத்தில் அதில் பயணித்த 2 பைலட்களும் பரிதாபமாக உயிரிழந்தனர். அவர்களில் ஒருவர் தமிழ்நாட்டின் தேனி மாவட்டத்தை சேர்ந்த மேஜர் ஜெயந்த். இது தொடர்பான தகவல் வெளியானதுமே முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது வேதனை மற்றும் இரங்கலை உடனடியாக வெளியிட்டார்.

மேலும் வீரமரணமடைந்த மேஜர் ஜெயந்த் உடலுக்கு, தமிழக அரசின் சார்பில் அஞ்சலி செலுத்துமாறு, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை அமைச்சர் ஐ.பெரியசாமிக்கு முதல்வர் அறிவுறுத்தினர். இதனைத் தொடர்ந்து, மேஜர் ஜெயந்த் குடும்பத்துக்கான நிதியுதவியாக ரூ.20 லட்சம் வழங்கப்படுவதாக முதல்வர் அறிவித்தார்.

தற்போது இந்த உதவித்தொகை இரு மடங்காக உயர்த்தப்படுவதாக, நடப்பு நிதிநிலை அறிக்கையில் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் இன்று அறிவித்துள்ளார். இதன்படி, ‘நாட்டின் எல்லைகளை பாதுகாக்கும் போது உயிர் தியாகம் செய்த தமிழ்நாட்டைச் சேர்ந்த படைவீரர்கள் குடும்பத்திற்கு வழங்கப்படும் கருணைத்தொகை, 20 இலட்சம் ரூபாயில் இருந்து இருமடங்காக உயர்த்தி 40 இலட்சம் ரூபாயாக வழங்கப்படும்’ என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டுக்காக வீரமரணமடையும் ராணுவ வீரர்களின் குடும்பத்தாருக்கு ஆதரவளிக்கும் வகையில் வெளியாகி இருக்கும் தமிழக அரசின் பட்ஜெட் அறிவிப்பு வரவேற்பு பெற்றுள்ளது. இதனூடே, இரண்டு தினங்கள் முன்பாக மேஜர் ஜெயந்துக்கான தமிழக அரசின் உதவித்தொகை ரூ20 லட்சம் அறிவிப்பாகி உள்ள சூழலில், அது உயர்த்தப்பட்ட இரட்டிப்புத்தொகையான ரூ40 லட்சமாக ஜெயந்தின் குடும்பத்தாருக்கு கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.

SCROLL FOR NEXT