தேசம்

அடுத்த குடியரசுத் தலைவர் அனுசுயா உய்கேவா?

ஆர்.என்.சர்மா

குடியரசுத் தலைவராகப் பதவி வகிக்கும் ராம்நாத் கோவிந்தின் பதவிக்காலம் வரும் ஜூலை மாதத்துடன் முடிவுக்கு வருகிறது. அடுத்து யார் குடியரசுத் தலைவர் வேட்பாளராக நிறுத்தப்படுவார் என்று அரசியல் வட்டாரங்களில் ஊகங்கள் எழுந்துவிட்டன. தெலங்கானா ஆளுநர் தமிழிசை பெயரைக் கூட சில வாரங்களுக்கு முன்னால் பத்திரிகைகள் சில வெளியிட்டன. ஆளும் பாஜக வட்டாரங்கள் இதுபற்றி இன்னமும் வாய் திறக்கவில்லை. இந்தச் சூழலில், சத்தீஸ்கர் மாநிலத்தின் ஆளுநரும் பழங்குடி சமூகத் தலைவருமான அனுசுயா உய்கே பாஜக சார்பில் நிறுத்தப்படலாம் என்ற பேச்சு இப்போது அடிபடுகிறது.

அனுசுயா யார்?

1957 ஏப்ரல் 10-ல் மத்திய பிரதேச மாநிலத்தின் சிந்த்வாரா மாவட்டத்தில் உள்ள ரோஹணா காலா கிராமத்தில் பிறந்தவர் அனுசுயா. பொருளியலில் முதுகலைப் பட்டமும் சட்டத்தில் இளங்கலைப் பட்டமும் பெற்றவர். சமூக சேவகரான இவருக்கு விவசாயத்திலும் ஆர்வம் அதிகம்.வாழ்க்கையில் பல்வேறு ஏற்ற இறக்கங்களைச் சந்தித்தவர். பள்ளிக்கூட நாட்களிலிருந்தே சமூக, அரசியல் நடவடிக்கைகளில் ஆர்வம் காட்டி வந்தார். பழங்குடிகளின் நலனுக்காகப் பல நிலைகளிலும் பாடுபட்டார். பொருளாதாரத்தில் முதுகலைப் பட்டம் படித்துள்ள அவர் பல்கலைக்கழகத்தில் சிறிது காலம் விரிவுரையாளராகப் பணியாற்றினார். அந்தக் கட்டத்தில் தீவிர அரசியலிலும் இறங்கினார்.

1985-ல் மத்திய பிரதேச சட்டப் பேரவைக்கு தமுவா தொகுதியிலிருந்து காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அதற்குப் பிறகு அவருடைய பொது வாழ்க்கையில் பின்னடைவே கிடையாது. 2006-ல் மாநிலங்களவை உறுப்பினரானார். மத்திய பிரதேசத்தில் அர்ஜுன் சிங் தலைமையிலான அரசில் மகளிர்-குழந்தைகள் நல அமைச்சராகப் பதவி வகித்தார். தேசிய அளவில் பல்வேறு ஆணையங்களில் உறுப்பினராகப் பதவி வகித்திருக்கிறார்.

தங்களுடைய நலனுக்காகத் தொடர்ந்து உழைப்பவர் என்பதால் பழங்குடிகளால் பெரிதும் மதிக்கப்படுகிறார். பழங்குடிப் பெண்களுக்கு அதிகாரம் கிடைக்க வேண்டும் என்பதற்காக 22 மாநிலங்களில் 80-க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் தொடர்ச்சியாக விரிவாக சுற்றுப்பயணம் செய்திருக்கிறார். அவர் தயாரித்த அறிக்கை வாஜ்பாய் தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசிடம் மேல் நடவடிக்கைகளுக்காக வழங்கப்பட்டது. காங்கிரஸில் அரசியல் வாழ்க்கை தொடங்கியிருந்தாலும், பாஜகவினராலும் மதிக்கப்படுகிறவராகத் திகழ்கிறார்.

வாய்ப்பு உண்டா?

பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் சிறுபான்மைச் சமூகத்தைச் சேர்ந்த அப்துல் கலாம், பட்டியல் இனத்தைச் சேர்ந்த ராம்நாத் கோவிந்துக்குப் பிறகு பழங்குடிகள் சமூகத்தைச் சேர்ந்த அனுசுயா உய்கே வேட்பாளராவார் என்று தெரிகிறது. இவருக்கு வாய்ப்பு தரும்போது மகளிருக்கு மேலும் ஒரு முறை குடியரசுத் தலைவர் பதவிக்கான வாய்ப்பு வழங்கப்பட்டதாகிவிடும்.

பாஜக வேட்பாளரை எதிர்க்கட்சிகள் ஏற்பதற்கான வாய்ப்புகள் குறைவு. எதிர்க்கட்சிகள் நிறுத்தும் வேட்பாளர் வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் அதைவிடக் குறைவு. இருதரப்பும் கருத்தொற்றுமை அடிப்படையில் இணங்கிச் செல்ல ஓரளவுக்கு அரசியலில் தீவிரமாகச் செயல்படாதவராக இருப்பது நல்லது. பழங்குடி வேட்பாளர் என்றால் எதிர்க் கட்சிகளாலும் தீவிரமாக அவரை எதிர்க்கவோ, வேண்டாமென்று நிராகரிக்கவோ முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT