காவலர் ராஜசேகர் 
தேசம்

ட்விட்டரை உலுக்கும் ‘மாரடைப்பு’ -பின்னணி என்ன?

காமதேனு

ட்விட்டர் சமூக வலைதளத்தில் இன்றைய தினத்தின் ட்ரெண்டிங் அம்சங்களில் ’ஹார்ட் அட்டாக்’ என்பது, பெரியளவில் விழிப்புணர்வூட்டி வருகிறது.

மாரடைப்பு, இதய செயலிழப்பு, ஸ்ட்ரோக் என ஒன்றுக்கொன்று தொடர்புடைய 3 பாதிப்புகள், அவற்றால் ஏற்படும் விளைவுகள் குறித்த செய்திகள் மற்றும் விழிப்புணர்வு பதிவுகளால் கடந்த சில தினங்களாக சமூக ஊடகப் பதிவுகள் நிரம்பி வழிந்தன. இந்த பாதிப்புக்கு மயில்சாமி, நந்தமூரி தாரகா ரத்னா போன்ற பிரபலங்கள் ஆளாகும்போது அவற்றின் வீச்சு மேலும் அதிகரித்து இருந்தது.

கையடக்க மொபைல் கேமரா அனைவர் வசமிருப்பதும், சிசிடிவி பதிவுகள் வாயிலாகவும், மாரடைப்பின் கடைசி விநாடிகளை பதிவு செய்வதும் சாத்தியமாகி இருக்கிறது. மாரடைப்புக்கு ஆளாவோர் எண்ணிக்கை அதிகரிக்கும்போது அது குறித்த பதிவுகள் சமூக ஊடகங்களில் அதிகரிக்கவும் செய்கின்றன. அந்த வகையில், உடற்பயிற்சி செய்வோர், உணவு உண்போர், வழிபாட்டில் ஈடுபட்டிருப்போர், சாலையில் சாதாரணமாக நடந்து செல்வோர் என பலதரப்பட்ட மனிதர்களும், மிகச் சாதாரணமாக மாரடைப்புக்கு ஆளாவதும், துடித்து உயிரை விடுவதும் இந்தப் பதிவுகளின் வழியே பரவி கிலியூட்டுகின்றன.

ஹைதராபாத்தை சேர்ந்தவர் ராஜசேகர். போக்குவரத்துக் காவலரான இவர், கண்ணெதிரே இளைஞர் ஒருவர் மாரடைப்பு காரணமாக சாலையில் சுருண்டு விழுவதை பார்க்கிறார். உடனடியாக சிபிஆர் அவசர முதலுதவி மூலம் அந்த இளைஞரின் இதயத் துடிப்பை மீட்க முயற்சிக்கிறார். நீண்ட போராட்டத்தின் வாயிலாக, கிட்டத்தட்ட சடலமாகி இருந்த அந்த இளைஞரின் உயிரையும் மீட்கிறார். இந்த நிகழ்வினை சக பயணி ஒருவர் கைப்பேசி கேமராவில் பதிவு செய்து சமூக ஊடகத்தில் வலையேற்றி இருக்கிறார்.

இந்த பதிவு, மாரடைப்பு விழிப்புணர்வு மட்டுமன்ற அவசர உபாய சிகிச்சைக்கான உதவி குறித்த விழிப்புணர்வையும் அதனை அனைவரும் கற்றாக வேண்டியதன் முக்கியத்துவத்தையும் உணர்த்துகிறது. இப்படி, அன்றாட நிகழ்வுகளில் இருந்தும், அதையொட்டிய மருத்துவர்கள் மற்றும் வல்லுநர்களின் வழிகாட்டுதல்களும் வளையவந்தபடி உள்ளன. பொழுதுபோக்கு மற்றும் வறட்டு அரட்டைகளுக்கு மத்தியில், பயனுள்ள நிகழ்வுகளும் அவ்வப்போது சமூக ஊடகங்களில் அரங்கேறுவது உண்டு. அந்த வகையில் இன்றைய தினத்தை அர்த்தமுள்ளதாக்கி வருகின்றன மாரடைப்பு ட்ரெண்டிங் பதிவுகள்.

SCROLL FOR NEXT